எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் எண்ணெய் பத்திரங்கள் குறித்து அரசு ஏன் நம்மைத் தவறாக வழிநடத்துகிறது?
“ஏன் எனும் காரணம் முக்கியமில்லை, பின்னணி விளக்கத்தை விவரிப்பது மட்டுமே முக்கியம்.” – “சப்-அர்பன் டிக்ஸ்” நாவலிலிருந்து “ஃபேபியன் நிசியேசா”.
இப்போது நிலவும் அதீத பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட எண்ணெய் பத்திரங்கள் தான் காரணம் என்று கடந்த சில ஆண்டுகளாக தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பழி கூறுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். முந்தைய எரிபொருட்கள் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2018-ல் இவ்வாறு ட்வீட் செய்திருந்தார்: “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது வெளியிடப்பட்ட ₹ 1.4 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களின் அதிர்ச்சியில் இருந்து நாடும், எண்ணெய் விற்பனை நிறுவனங்களும் இன்னும் மீளவில்லை.”
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்விற்கு எண்ணெய் பத்திரங்களே காரணம் என்று சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில் குற்றம் சாட்டியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது உண்மையல்ல. இது குறித்து நான் முந்தைய கட்டுரைகளில் மிக விரிவாக விளக்கியுள்ளேன். இருப்பினும், நான் சொல்ல விரும்பும் புதிய விவரங்களை நீங்கள் பெறுவதற்கு முன்பாக, அதன் சாரத்தை சுருக்கமாக வழங்க முயற்சிக்கிறேன். பெரும்பாலான எண்ணெய் பத்திரங்கள் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் வெளியிடப்பட்டன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயுவை அரசு நிர்ணயிக்கும் விலையில் விற்பதில் நிகழும் இழப்பீட்டை ஈடுசெய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, ஏனெனில் எண்ணெய் நிறுவனங்களுக்குப் இந்த இழப்பீட்டைத் தாங்குவது பணரீதியாக சாத்தியமற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு முன்வைக்கும் வாதம் என்னவென்றால், இந்தப் பத்திரங்களுக்கு வட்டி செலுத்தப்பட வேண்டும் மற்றும் பத்திரங்களுக்குக்கு அசல் தொகை செலுத்த வேண்டும் என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் மீது அரசு அதிக கலால் வரியை வசூலிக்க வேண்டியிருக்கிறது. இதனால் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உள்ளது. அந்த வகையில், ஐ.மு.கூ அரசின் பாவங்களுக்காக இப்போது பாரதீய ஜனதா அரசும், நீங்களும் நானும் பணம் செலுத்துகிறோம். இந்த வாதம் நான் இங்கே எழுதி இருக்கும் அளவுக்குத் தெளிவான வார்த்தைகளில் கூறப்படவில்லை. எனவே மக்கள் இதில் இருக்கும் இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளவும், தங்கள் வாட்ஸ்அப் பார்வர்டுகளை உருவாக்கும் வகையிலும் அரசு கூறும் விஷயங்கள் தெளிவற்றதாக உள்ளன.
மார்ச் 2014 வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நிலுவையில் இருந்த மொத்த எண்ணெய் பத்திரங்களின் மதிப்பு ₹ 1,34,423 கோடியாக இருந்தது. மார்ச் 2015 வாக்கில், இது ₹ 1,30,923 கோடியாகக் குறைந்தது, அதே அளவில் தான் 2021 வரை உள்ளது. அதாவது மார்ச் 2015 இல் இருந்து மார்ச் 2021 வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் எண்ணெய் பத்திரங்கள் எதுவும் முதிர்ச்சியடையவில்லை, எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு ரூபாய் எண்ணெய் பத்திரங்களை கூட திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், உறுதியாக இந்தப் பத்திரங்களுக்கு வட்டி செலுத்த வேண்டியிருந்தது. இந்த பத்திரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ₹ 9,990 கோடி வட்டி செலுத்தப்பட வேண்டும். அதாவது, ஆறு ஆண்டுகளில், மார்ச் 2015 இல் இருந்து மார்ச் 2021 வரையிலான காலத்தில் இந்த பத்திரங்களுக்கு வட்டியாக அரசு ₹ 59,940 கோடி வழங்கியுள்ளது.
அதே காலகட்டத்தில், பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியாக அரசு ₹ 14,60,036 கோடி வசூலித்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் துவக்கத்தில் மக்களவையில் அரசு கூறியது போல “மத்திய கலால் வரியானது பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்துதான் கிடைக்கிறது .” எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் ஈட்டப்படும் கலால் வரியானது, பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையில் ஈட்டப்படும் கலால் வரியில் பெரும்பகுதியை ஈடு செய்கிறது. மொத்தத்தில், இந்த காலகட்டத்தில், பெட்ரோலியப் பொருட்களின் மீது வசூலிக்கப்பட்ட கலால் வரியில் 4.1% எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதற்காக வழங்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில் இது வெறும் 2.7% ஆக இருந்தது (பெட்ரோலியப் பொருட்கள் மூலம் ஈட்டிய ₹ 3,71,726 கோடி கலால் வரிக்கு எதிராக ₹ 9,990 கோடி வட்டி).
உள்ளபடி பார்த்தோமேயானால், மார்ச் 2015 முதல் மார்ச் 2021 வரையிலான இடைவெளியில், வெறும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது வசூலிக்கப்படும் கலால் வரியைப் கணக்கிட்டால் அது சுமார் ₹ 13.7 லட்சம் கோடியாகும். எண்ணெய் பத்திரங்களுக்கு செலுத்தப்படும் வட்டி இந்த தொகையில் 4.4% ஆகும். நடப்பு நிதியாண்டான 2021-22 ஆம் ஆண்டில், ₹ 10,000 கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் முதிர்ச்சியடைகிறது, இது, திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இந்த ஆண்டில் எண்ணெய் பத்திரங்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி சுமார் ₹ 9,500 கோடி. எனவே, 2020-21 ஆம் நிதியாண்டில், இந்த எண்ணெய் பத்திரங்களுக்கு வழங்க அரசுக்கு சுமார் ₹19,500 கோடி தேவைப்படும்.
சமீபத்தில் அரசு மக்களவையில் அளித்த பதிலில், “இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஈட்டிய மொத்த கலால் வரி ₹ 94,181 கோடி என்று கூறியது. இந்த காலகட்டத்தில் கோவிட்-19 இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்தது, மேலும் அது பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை எதிர்மறையாக பாதித்திருந்தது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இப்போதைய நிலையில் தொடர்ந்தால், இந்த ஆண்டு மொத்த கலால் வரி வசூல் மிக எளிதாக ₹ 4 லட்சம் கோடியைத் தொடமுடியும். ஆனால், பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி வசூல் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
₹ 19,500 கோடி என்பது ₹ 4 லட்சம் கோடியில் சுமார் 4.9% மட்டுமே. எனவே, பெட்ரோல் மற்றும் டீசலில் வசூலித்த கலால் வரியில் இருபதில் ஒரு பங்கை, எண்ணெய் பத்திரங்களுக்கு (முதிர்ச்சியடையும் பத்திரங்களை திருப்பிச் செலுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள பத்திரங்களுக்கு வட்டி செலுத்துதல்) செலுத்துவதில் அரசாங்கம் செலவிட வாய்ப்புள்ளது. மீதமுள்ள ₹ 1,20,923 கோடி (₹ 1,30,923 கோடியில் இந்த ஆண்டு முதிர்ச்சியடையும் ₹ 10,000 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் கழித்து) பத்திரங்கள் நவம்பர் 2023 முதல் மார்ச் 2026 க்கு இடையில் முதிர்ச்சியடைகிறது. வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த பத்திரங்களை திருப்பிச் செலுத்துவதற்கு அரசு பணத்தை சேமிக்க வேண்டும் என்பது மற்றொரு வாதம். ஆனால், 2023 – 2026 ஆம் ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் பத்திரங்கள், அந்த ஆண்டுகளின் வரிகளைப் பயன்படுத்தி திருப்பிச் செலுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, பத்திரங்களை திருப்பிச் செலுத்துவதற்காக அரசாங்கம் சேமிக்க வேண்டும் என்ற வாதம் செல்லுபடியாகாது.
எனவே, எண்ணெய் பத்திரங்களுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக கலால் வரியை அரசாங்கம் வசூலிக்க வேண்டிய சூழலில் உள்ளது என்ற முழுவாதமும் முற்றிலும் தவறானது. நான் முன்பே விளக்கியபடி, இதற்கான காரணம் என்னவென்றால், பெருநிறுவனங்கள் செலுத்தும் வரி வசூல் மிகப்பெரிய வீழ்ச்சியில் உள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், மொத்த கார்ப்பரேட் வரிவசூல் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்திய வருமான வரியானது ₹ 6.64 லட்சம் கோடியாக இருந்தது, 2019-20 ஆம் நிதியாண்டில் இது ₹ 5.57 லட்சம் கோடி, 2020-21 ஆம் நிதியாண்டில் இது மேலும் குறைந்து ₹ 4.57 லட்சம் கோடியாக ஆகிவிட்டது.
2019 செப்டம்பரில் கார்ப்பரேட் வரியின் அடிப்படை விகிதம் 30% லிருந்து 22% ஆக குறைக்கப்பட்டதன் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக 2020-21 ல் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த லாபம் ஈட்டியிருக்க வேண்டும், எனவே அரசுக்கு வரவேண்டிய கார்ப்பரேட் வரி வசூல் குறைந்தது என்றும் வாதிடலாம். ஆனால், உண்மை வேறு, 2020-21 ஆம் நிதியாண்டில், பட்டியலிடப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் (5,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்) நிகர இலாபம் 2019-20 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 120.3% அதிகரித்துள்ளது என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் புள்ளிவிவரங்கள் நமக்குச் சொல்கிறது.எனவே, பெருந்தொற்றுக் காலத்தில் பட்டியலிடப்பட்ட கார்ப்பரேட்டுகளின் லாபம் பாதிக்கப்படவில்லை. நிகர இலாபம் 120.3% உயர்ந்த போதும் இந்த நிறுவனங்கள் செலுத்திய கார்ப்பரேட் வரி வெறும் 13.9% என்ற அளவில் மட்டுமே உயர்ந்தது.
கோவிட் பெருந்தொற்று எதிர்மறையாக சிறு வணிகங்களை பாதித்துள்ளது, இந்தக் காரணி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பெருநிறுவன வரி வசூலைப் பாதித்திருக்கலாம். ஆனால் பெருநிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி வசூல் வீழ்ச்சியின் பெரும்பகுதி குறைந்த வரி விகிதத்தினால் நிகழ்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிகமாக விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் இது ஈடு செய்யப்பட்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், மத்திய அரசால் பெட்ரோலியப் பொருட்களின் மீது வசூலிக்கப்பட்ட கலால் வரி ₹ 2.14 லட்சம் கோடியை ஈட்டியது. இது 2020-21 ஆம் ஆண்டில் ₹ 3.72 லட்சம் கோடியாக உயர்ந்தது, இந்த பெருமை பெட்ரோல் டீசல் மீது சுமத்தப்பட்ட கலால் வரிக்குத்தான்.
பெருநிறுவன வரிக் குறைப்பு நுகர்வை அதிகரிக்கவும் பெருநிறுவன முதலீடுகளை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்றும் கருதப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி ஏதும் நடக்கவில்லை. குறைந்த கார்ப்பரேட் வரிகளால் நுகர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பது வணிகக் காற்றாடி உயரப் பறக்கும் காலத்தில் மட்டுமே நிகழும், பெருநிறுவன வரிகள் குறையும்போது அல்ல, அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை மக்கள் பெறுகிற போதுதான் நுகர்வு அதிகரிக்கும். முதலீடு பல்வேறு காரணங்களால், கடந்த பத்தாண்டுகளாக அதல பாதாளத்தில் கிடக்கிறது, கடந்த காலத்தில் பல முறை இது குறித்து எழுதியிருப்பதால், மீண்டும் அவற்றை நான் இங்கே விரிவாக ஆராயப் போவதில்லை.
இது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைச் சுற்றி ஒரு தகவல் தொடர்பு சிக்கலை உருவாக்கியுள்ளது. “நட்ஜ்-தி பைனல் எடிஷன்” என்ற நூலில், ரிச்சர்ட் தாலரும், காஸ் சன்ஸ்டீனும் விளம்பரக் கொள்கையைப் பற்றி விவாதித்துள்ளனர், இது துவக்கத்தில் தத்துவவாதியான ஜான் ராஸால் விளக்கப்பட்டது. தாலர் மற்றும் சன்ஸ்டைன் சொல்வது போல “ஒரு நிறுவனம் அல்லது அரசானது, பொதுவெளியில் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால், அது கணிசமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், ஒருவேளை எதிர்பார்த்ததை விட மிக மோசமாக விளைவுகள் இருக்கும் [வலியுறுத்தி சேர்க்கப்பட்ட].” இதுதான் இப்போது துல்லியமாக அதிக பெட்ரோல் மற்றும் டீசல் விலை பிரச்சினையை சுற்றி நிகழும் விஷயம். குறைந்து போன கார்ப்பரேட் வரி வசூலை ஈடுசெய்வதற்காக, பெட்ரோல் மற்றும் டீசல் மீது அரசு விதிக்கும் அதிக கலால் வரி மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு ஒரே காரணம்.
2014 அக்டோபரில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ₹ 9.48 ஆக இருந்தது, அது தற்போது லிட்டருக்கு ₹ 32.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, அதாவது, 250% ஆக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி கடந்த ஒரு வருடத்தில் நிகழ்ந்துள்ளது, லிட்டருக்கு சுமார் ₹10. இதே போலவே கலால் வரி டீசலுடனும் விளையாடியுள்ளது, அக்டோபர் 2014 இல் லிட்டருக்கு ₹ 3.56 ஆக இருந்த கலால் வரி தற்போது லிட்டருக்கு ₹ 31.80 ஆக உயர்த்தப்பட்டு முன்பைவிட 800% ஆக உயர்ந்துள்ளது. (பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறித்த மத்திய அரசின் அறிவிப்புகளைப் பயன்படுத்தி இந்த தகவலை எனக்கு வழங்கிய சிந்தன் படேலுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்). ஆனால், கதைகள் சொல்லும் நம்முடைய அரசானது இதனை நிச்சயமாக ஒப்புக்கொள்ளாது. இதன் பொருள் என்னவென்றால், சாதாரண மக்கள், குறைந்து போன கார்ப்பரேட் வரிகளை ஈடு கட்டும் வகையில் வரி செலுத்த வைக்கப்படுகிறார்கள் இதை உலகிற்கு சொல்வதே என்னுடைய நோக்கம். எண்ணெய் பத்திரங்கள் திருப்பி அளிக்கப்பட வேண்டும், அவற்றுக்கான வட்டி செலுத்தப்பட வேண்டும், ஆகவேதான் நாங்கள் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிப்புக்கான காரணம் என்று சொல்லப்படும் கதையின் பின்புலம் இதுதான்.
இந்தக் கதைகளை எளிதாக வாட்ஸ்அப் சுற்றுக்கு விட முடியும், பெரும்பாலானவர்களுக்கு இதன் பின்னிருக்கும் உண்மைகளை சரிபார்க்கவோ, உண்மையைத் தெரிந்து கொள்ளவோ நேரமில்லை, உலகின் புதிய மிக வேகமாக வளரும் வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தில் அவர்களுக்கு அனுப்பப்படும் எதையும் அவர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள்.
தாமஸ் சோவெல்லின் கூற்றுதான், தற்போதைய அரசாங்கம் பயன்படுத்தி வரும் ஒரு கதை சொல்கிற சித்தாந்தத்தை முன்வைக்கிறது, அதாவது, எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என்று கடந்த கால அரசை தவறாக குற்றம் சாட்டுகிறது. தாலர் மற்றும் சன்ஸ்டைன் எழுதியது போல்: “அனைத்து வகையான அமைப்புகளும் மக்களை மதிக்க வேண்டும், அவர்கள் பொதுவெளியில் தற்காத்துக் கொள்ள முடியாத அல்லது பாதுகாக்க முடியாத கொள்கைகளை கடைப்பிடித்தால், மக்களுக்கான மரியாதையை கொடுக்கத் தவறுகிறார்கள். மாறாக, அவர்கள் குடிமக்களை தங்கள் சொந்த பயன்பாட்டிற்காகவோ, அதற்கான கருவிகளாகவோ பயன்படுத்துகிறார்கள் [முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது].” இதுதான் இப்போது துல்லியமாக நடக்கிறது.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, ஏறக்குறைய எரிபொருள் விலை உயர்வுக்கான சரியான காரணத்தை அரசு கொடுத்துள்ளது. அதில் கூறியது போல “பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரி விகிதமானது, உள்கட்டமைப்பு மற்றும் பிற வளர்ச்சிக் காரணிகளை முன்னிறுத்தி வளங்களை உருவாக்கும் நோக்கத்துடன் அவ்வப்போது அளவிடப்படுகிறது, இது தொடர்பான எல்லாக் காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டும், தற்போதைய அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டும் அவை திருத்தி அமைக்கப்படுகிறது.” ஒவ்வொரு அரசுக்கும் குடிமக்களின் மீது வெவ்வேறு வழிகளில் வரி விதிக்க உரிமை உண்டு. இந்த பதில் துல்லியமாக அதைத்தான் நமக்கு சொல்கிறது. நிச்சயமாக, வரிகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை விளக்குவது எப்போதும் நேரடியானதல்ல.