எரிபொருள் காரே வேண்டாம் என்கிறார் கட்கரி..

இந்தியாவை பசுமை ஆற்றல் கொண்ட பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விருப்பம் ஒன்றை தெரிவித்திருக்கிறார். அதன்படி ஹைப்ரிட் வகை வாகனங்களுக்கு ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள 36 கோடி பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை முற்றிலுமாக நீக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். பெட்ரோல், டீசல் கார்களை முற்றிலுமாக ஒழிப்பது கடினம் என்றும் அதே நேரம் அது சாத்தியம் இல்லாமல் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்தியா எரிபொருள் இறக்குமதிக்காக 16 லட்சம் கோடி ரூபாயை செலவு செய்வதாக கூறியுள்ள கட்கரி, இதனை நம்மூர் விவசாயிகள், கிராமபுறத்தில் இருப்பவர்கள் வளம்பெற பயன்படுத்தலாம் என்றும், கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார். தற்போது வரை ஹைப்ரிட் ரக வாகனங்களுக்கு 12 விழுக்காடு ஜிஎஸ்டி இருக்கிறது. இதை விரைவில் 5 விழுக்காடாக குறைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறியுள்ளார். உயிரி எரிபொருள்களை பயன்படுத்தினால் படிம எரிபொருள் பயன்பாடு முற்றிலுமாக நீக்கிவிடலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் நிதின் கட்கரி படிம எரிபொருளை மாற்ற வேண்டும் என்று முயன்று வருகிறார். பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ ஆகிய நிறுவனங்கள் பிளக்ஸ் ரக இன்ஜின்களை தயாரிக்கும் பணிகளில் முன்வந்துள்ளதாகவும் கட்கரி கூறியுள்ளார். டாடா மற்றும் அசோக் லேலாண்ட் நிறுவனங்கள் விரைவில் ஹைட்ரஜனில் இயங்கும் டிரக்குகளை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் , உயிரி சார்ந்த அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய நாடு முழுவதும் 350 நிறுவனங்கள் ஆலையை இயக்கி வருவதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார். விரைவில் வெளிநாடுகளில் இருந்து எரிபொருட்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டு இந்தியா தன்னிறைவை எட்டும் என்றும் அவர் உறுதிபட நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.