LIC – IPO வில் சீன முதலீட்டுக்குத் தடை வருமா?
எல்.ஐ.சி யின் $ 12.2 பில்லியன் மதிப்பிலான நாட்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதிக்கலாம் என்று இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால், சீன முதலீட்டாளர்கள், எல்.ஐ.சியின் பங்குகளை வாங்குவதைத் தடுக்க அரசு விரும்புகிறது என்ற தகவலை இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் சிலரும், வங்கியாளர்களும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த முடிவானது இரு நாடுகளுக்கும் இடையில் தொடரும் பதட்ட நிலையை எதிரொலிப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் நாட்டின் ஆயுள் காப்பீட்டு சந்தையில் 60 சதவிகிதத்தையும், $ 500 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களையும் உள்ளடக்கியது.
சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் இருநாட்டு வீரர்களும் மோதலில் ஈடுபட்ட பின்பு, கடந்த ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பதட்டம் அதிகரித்தது. இதற்குப் பிறகு இந்தியா முக்கியத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் சீன முதலீட்டைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறது. சீன மொபைல் ஆப் பயன்பாடுகள் மீதான தடை மற்றும் சீனப் இறக்குமதிப் பொருட்களின் மீதான கூடுதல் ஆய்வுகள் இதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், இந்திய நிதி அமைச்சகம், சீன வெளியுறவுத்துறை மற்றும் சீன வர்த்தக அமைச்சகங்கள் இது குறித்து வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்கும் விதமாக நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு இந்த நிதியாண்டில் மட்டும் எல்.ஐ.சி யின் 5 % முதல் 10 % வரையிலான பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ₹ 900 பில்லியன் வரை திரட்டத் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிதித் திரட்டானது ஒரே தவணையில் நடக்குமா? அல்லது இரண்டு தவணைகளில் திரட்டப்படுமா? என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.
தற்போதைய இந்திய சட்டங்களின்படி எந்த வெளிநாட்டு முதலீட்டாளரும் எல்.ஐ.சியில் முதலீடு செய்ய முடியாது. ஆனால், இப்போது வெளிநாட்டு நிறுவன முதலீடுகளை 20 % வரை அனுமதிக்கலாம் என்று அரசு பரிசீலனை செய்து வருகிறது. எல்.ஐ.சியில் பிரத்தேயகமாக சீன முதலீட்டைத் தடுப்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வது, வெளிநாட்டு நேரடி முதலீடு குறித்த சட்டத்தில் திருத்தம் செய்வது, அல்லது எல்.ஐ.சிக்கு மட்டுமான ஒரு புதிய சட்டத்தை உருவாக்குவது போன்ற பல்வேறு வாய்ப்புகளைக் குறித்து அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. இவற்றை மீறி மறைமுகமாக வரக்கூடிய சீன முதலீடுகளை சரிபார்ப்பதில் உள்ள சிக்கல்களையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இந்தியாவின் பாதுகாப்பு பாதிக்காத வண்ணம் ஒரு சிறந்த கொள்கையை அரசு உருவாக்க முயற்சிக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரிசீலனையில் இருக்கும் மூன்றாவது விருப்பமானது, சீன முதலீட்டாளர்கள் இயல்பான பிற முதலீட்டாளர்களைப் போல நேரடியாக முதலீடு செய்வதைத் தடுக்கும் வகையில் இருந்தாலும், இரண்டாம் நிலை சந்தைகளில் அவர்கள் பங்குகள் வாங்குவதைத் தடுக்காது. கோல்ட்மன் சாச்ஸ், சிட்டிகுரூப் மற்றும் எஸ்பிஐ கேபிடல் மார்கெட் உள்ளிட்ட பத்து முதலீட்டு வங்கிகள் இந்த ஐ.பி.ஓ வைக் கையாளத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.