சமையல் கேஸ் மானிய இடைநிறுத்தம் மூலம், அரசாங்கத்தின் ₹ 20,000 கோடி சேமிப்பு! சரிதானா?
எல்பிஜி விலை ஏற்றம்
இந்தியாவில், செப்டம்பர் 1 ஆம் தேதியன்று 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ₹ 25 வீதம் விலை உயர்ந்து, தில்லியில் ₹ 885க்கு வழங்கப்படுகிறது. சமையல் எரிவாயுவான எல்பிஜி சிலிண்டரின் விலை கடந்த 2020 மே மாதத்திலிருந்து தற்போது வரை ₹300க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு நிச்சயமாக இதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
மானிய இடைநிறுத்தம்
இந்திய குடும்பங்களை உலகளாவிய விலை உயர்வு அதிர்ச்சியிலிருந்து காக்கும் தற்காப்பு நடவடிக்கையாகவும், நுகர்வோருக்கு விலையை நிலையாக வழங்குவதற்காகவும் இந்திய அரசாங்கம் பல்லாண்டு காலமாக எல்பிஜிக்கு மானியம் வழங்கி வருகிறது. ஆனால் மே 2020 முதல் நாட்டில் உள்ள 29 கோடி எல்பிஜி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு நுகர்வோருக்கான மத்திய அரசின் மானியம் கிடைக்கவில்லை. அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை, நேரடியாக வங்கியில் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்த மானியத்தொகையும் கிடைக்கப்பெறவில்லை.
நாளிதழ் ஒன்றின் பகுப்பாய்வின்படி, தொற்றுநோய் தொடங்கியது முதல், மானிய நிறுத்தம் மூலம் சுமார் ₹ 20,000 கோடி வரை அரசு சேமித்திருக்கலாம் என்று கூறுகிறது. 2020ஆம் ஆண்டின் இறுதி வரை எல்பிஜி-ன் விலை குறைவாக இருந்த நிலையில், மானியம் தேவையற்றது என்று கருதினாலும், 2021 முதல் விலைவாசி ஏற்றதினால் பொதுவான நுகர்வுகளுக்கு மானியம் மிக அவசியமாகியது. எவ்வாறாயினும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ₹ 9000 கோடிக்கும் அதிகமாக செலவழித்து, 2020 ஆம் ஆண்டில் நாட்டின் ஏழை எல்பிஜி பயனர்களுக்கு 14.1 கோடி இலவச எல்பிஜி சிலிண்டர்களை அரசாங்கம் வழங்கியது.
இந்த பகுப்பாய்விற்கு, ஒரு மானிய சிலிண்டரின் விலை ₹ 650 என்று எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், தற்போதைய சந்தை விலையான ₹ 885-ல், ஒரு சராசரி நுகர்வோர் இந்த செப்டம்பரில் ஒரு சிலிண்டர் பெறுவதற்கு ₹ 235-ஐ மானியமாக திரும்ப பெற்றிருக்கலாம். இந்த அனுமானங்களின் அடிப்படையில், மானியத் தொகை ஆகஸ்ட் மாதத்தில் ₹ 210 மற்றும் ஜூலை மாதத்தில் ₹ 185-க்கு அருகில் இருந்திருக்கலாம்.
இந்தியா ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 14.5 கோடி எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்துகிறது, இதை வேறுவிதமாக கூறுவதென்றால், ஒரு சராசரி குடும்ப நுகர்விற்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு சிலிண்டர் தேவைப்படுகிறது. இது மே 2020 முதல் இன்று வரை நிலையானதாக கருதப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்துக்கான மானியத் தொகை சந்தை அறிவிக்கப்பட்ட விலையில் இருந்து ₹ 650 (மானிய சிலிண்டருக்கான உத்தேச விலை) கழித்து கணக்கிடப்பட்டுள்ளது. தரமதிப்பீட்டு நிறுவனமான “கிரிசில்” (CRISIL) வழங்கிய மாதாந்திர தரவு மற்றும் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, டிசம்பர் 2020 முதல் செப்டம்பர் வரையிலான மாதாந்திர சேமிப்பு ₹ 20,000 கோடியை விட சற்று அதிகமாக இருக்கும் என்பதைக் அந்த பகுப்பாய்வு காட்டுகிறது. இதன்மூலம், எல்பிஜி மானியங்களுக்கு அரசாங்கம் குறைவாக செலவழிக்கும் என்று அறியப்பட்டது.
2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நடப்பு நிதியாண்டில் திட்டமிடப்பட்ட எல்பிஜி மானியத்தை ₹ 14,073 கோடியாகக் கொண்டுள்ளது, இது 2020-21-ல் செலவிடப்பட்ட தற்காலிகத் தொகையான ₹ 36,178 கோடியை விடக் குறைவு. சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், எல்பிஜி மானியம் இந்தியாவில் உள்ள ஏழை பயன்பாட்டாளர் வீடுகளுக்கு சென்றடையவில்லை. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு எல்பிஜி வழங்குவதை அரசாங்கம் துரிதப்படுத்தியது. இந்தியாவில் உள்ள 29 கோடி எல்பிஜி நுகர்வோரில், 8 கோடி நுகர்வோர் PMUY பயனாளிகள்.
எல்பிஜி மானியம் அன்றும், இன்றும்
ஏப்ரல் 2014-ல், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் ஒரு எல்பிஜி சிலிண்டரின் மீது ₹ 567 மானியமாக வழங்கியது. பாரதீய ஜனதா தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. குறைந்த எண்ணெய் விலை காரணமாக, 2016-ல் ஒரு சிலிண்டருக்கான மானியம் ₹100 க்கு கீழே சென்றது. 2018க்கு பிறகு கச்சா எண்ணெய் விலைகள் உயரத்தொடங்கவும் மானியத் தொகையும் உயர்ந்தது. அந்த ஆண்டு நவம்பரில், இந்திய அரசாங்கம் ஒரு சிலிண்டருக்கு ₹ 941 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டதில் ₹ 434 மானியமாக வழங்கியது, இதன் மூலம் நுகர்வோருக்கு ₹ 506 நிகர விலையில் கிடைத்தது. பெருந்தொற்று தலையெடுப்பதற்கு சற்று முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரத் துவங்கியது.
மார்ச் 2020-ல், சிலிண்டருக்கு மானியம் ₹ 231 ஆக இருந்தது. சந்தை விலை ₹ 806 ஆகவும், நுகர்வோர் மானிய சிலிண்டருக்கு ₹ 575-ம் செலுத்தினர்.
பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிந்து, நவம்பர் 2020 இல் அறிவிக்கப்பட்ட சந்தை விலை ₹ 600 க்கு அருகில் இருந்தது. இந்த சந்தை விலை ஒரு நுகர்வோர் மானிய சிலிண்டருக்கு செலுத்தும் விலைக்கு இணையாக இருந்ததால் மானியம் வழங்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.
ஆனால் டிசம்பர் 2020 முதல் விலைகள் அதிகரிக்க துவங்கி, செப்டம்பரில் சிலிண்டர் விலை டெல்லியில் ₹ 885 ஐ எட்டியுள்ளன. கடந்த முறை ஒரு எல்பிஜி சிலிண்டரின் விலை இதே அளவில் இருந்த போது, அரசாங்கம் நுகர்வோருக்கு மானியமாக ₹ 377 க்கும் மேல் செலுத்தியது. இந்த முறை, வழங்கப்படும் மானியம் பூஜ்ஜியமாக உள்ளது.
தற்போது, எல்பிஜியின் சில்லறை விலை இறக்குமதி சமநிலை விலை முறையைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது, மேலும் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஒரு புதிய விலையை அறிவிக்கின்றன.
இப்போதைக்கு அரசு மானியத்தை நிறுத்தி வைத்து நிறைய பணத்தை சேமித்தது போல் தோன்றினாலும், எதிர்காலத்தில் அரசு இடைநிறுத்தத்தை நீக்குகிறதா? அல்லது மானியத்தை முற்றிலுமாக நிறுத்துகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருபக்கம் தொடர்ந்து உயரும் எல்பிஜி விலை, இன்னொரு பக்கம் முற்றிலுமாக நின்று போன மானியம் என்று “மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி” என்ற பழமொழியைப் போலிருக்கிறது சாமானியனின் வாழ்க்கை.