அநீதியிழைக்கும் “நீட்” தேர்வுமுறை – ப. சிதம்பரம்
இந்திய அரசியலமைப்பானது ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கச்சிதமானதாக இருந்தது, இந்திய அரசியலமைப்பின் தூண்களாக மூன்று பட்டியல்கள் இருக்கிறது. 1) ஒன்றிய அரசின் பட்டியல், 2) மாநிலப்பட்டியல் 3) இருவருக்குமான பொதுப்பட்டியல். முதலில் இயற்றப்பட்ட பட்டியல் இரண்டு (மாநிலப்பட்டியல்) 11 ஆவது விதிப்படி – பல்கலைக்கழகங்கள் உட்பட்ட கல்வியானது பட்டியல் 1 (ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்) இன் 63,64,65,66 விதிகளின் கீழ் வரும். பொதுப்பட்டியலின் 25 ஆவது விதிப்படி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழிலாளர் சார்ந்த கல்வி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.
மாநில உரிமைகளுக்கு விழுந்த சம்மட்டி அடி:
விதிகள் 63 முதல் 66 ஐப் பொறுத்தவரை யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஏனெனில் அவற்றில் சில குறிப்பிட்ட பெயர் கொண்ட நிறுவனங்கள், மத்திய அரசால் நிதியளிக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தர நிர்ணயம் ஆகியவற்றை கையாண்டன. இந்த விதிகளின் விளக்கம் பட்டியல் விதிகளைக் குறித்த தெளிவான பார்வையை வழங்கியது, மேலும் ‘கல்வி’ மாநிலப்பட்டியலுக்குள் வரும் என்ற கொள்கை உறுதி செய்யப்பட்டது.
ஒரு அவசர சட்டத்தின் மூலம் இந்த அரசு பாராளுமன்றத்தில் மாநிலப்பட்டியலின் 11 ஆவது விதியை உடைத்து நொறுக்கியது. அந்த விதி முற்றிலுமாக நீக்கப்பட்டது. பொதுப்பட்டியலின் 25 ஆவது விதி திருத்தி எழுதப்பட்டது, தொழில்நுட்ப கல்வி, மருத்துவ கல்வி மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட கல்வியானது, ஒன்றிய அரசுப் பட்டியலின் 63, 64, 65 மற்றும் 66 இன் விதிகளுக்கு உட்பட்டதாக மாறியது, கூடவே தொழில் மற்றும் தொழில் நுட்ப பயிற்சியும் இந்தப் பட்டியலுக்குள் போனது.
கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் மற்றும் சமூக நீதியின் தத்துவங்களுக்கு இது ஒரு சம்மட்டி அடியாக விழுந்தது, 44 ஆவது அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்திய இந்த அவசர அரசியல் நிபுணர்கள் கல்வி தொடர்பான உண்மையான மதிப்பீடுகளை மீட்டெடுப்பது அவசியம் (42 ஆவது சட்டதிருத்தத்தின் விளைவாகக் கண்டறியப்பட்ட சிக்கல்களை அகற்ற) என்று கருதவில்லை.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் மாநிலங்கள் மருத்துவக் கல்லூரிகளை நிறுவின, தனியார் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க அனுமதித்தன, இந்தக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதை மாநிலங்களே ஒழுங்குபடுத்தின. இதன் விளைவாகக் கல்வியின் தரமும் மேம்பட்டது, மாநிலங்களால் நிர்வகிக்கப்பட்ட இந்தக் கல்லூரிகளில் இருந்து திறமையான, மதிப்புமிக்க மருத்துவர்கள் வெளியே வந்தனர்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர்கள் டாக்டர் ரங்காச்சாரி மற்றும் டாக்டர் ராமசாமி முதலியார் ஆகியோர், சென்னை மருத்துவக் கல்லூரியின் நுழைவாயிலில் கல்விக் காவலர்களாக அவர்களின் சிலைகள் இப்போதும் நிற்கின்றன. மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. விஷயம் என்னவென்றால், போற்றுதலுக்குரிய புகழ்பெற்ற இந்த மருத்துவர்கள் (இது போன்ற மருத்துவர்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் உள்ளனர்) அகில இந்திய தேர்வுகளின் வழியாக வந்தவர்களில்லை.
மாநிலங்களின் உரிமைகளை அங்கீகரித்தல்:
மாநிலங்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கான அடிப்படை இதுதான்: மாநில மக்களின் வரிப்பணத்தில் இருந்து உருவாக்கப்பட்டவை மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகள், இந்தக் கல்லூரிகளின் நோக்கம் பரந்த அளவில் அந்தந்த மாநிலக் குழந்தைகளை ஆங்கிலத்திலோ, மாநிலங்களின் அதிகாரப்பூர்வப் பெரும்பான்மை மொழியிலோ மருத்துவம் படிக்க அனுமதிப்பது, இங்கிருந்து வெளியேறும் மருத்துவர்கள் அந்த மாநில மக்களின் நலனுக்காகப் பணியாற்றுவார்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவ வசதி இல்லாமல் அவதியுறும் மக்களுக்காக அவர்கள் சேவை செய்வார்கள், நோயாளிகளின் தாய்மொழியில் பேசி, அவர்களுக்கு ஆலோசனை வழங்கி சிறப்பாக அவர்களால் செயல்பட முடியும் என்பதுதான் இந்தக் கல்லூரிகளின் உண்மையான நோக்கம்.
மாநில அரசின் விதிமுறைகள் சமூக நீதி சார்ந்த பிரச்சினைகளையும் சிறப்பாகக் கையாண்டது. கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் முதல் தலைமுறையாகக் மருத்துவம் படிப்பவர்கள் ஆகியோரின் கல்வியை, மருத்துவக் கல்லூரி சேர்க்கையை அவர்கள் ஊக்குவித்தனர். தமிழ்நாட்டிலோ மகாராஷ்டிராவிலோ அப்போதிருந்த தேர்வு முறைகளைக் குறித்த எந்தப் புகாரும் இல்லை, குறிப்பாக என்னுடைய அறிவுக்கு எட்டியவரை தென் மாநிலங்களில் நிலவிய இந்த கல்வி அல்லது தேர்வு அமைப்பு பற்றி யாரும் குறை சொல்லவில்லை. ஆனால், தனிநபர் கட்டணம், அதிகப்படியான கட்டணம், மருத்துவக் கருவிகளின் தரக்குறைவு, போதுமான இணைக்கப்பட்ட மருத்துவமனைகள் இல்லாதது, போதுமான ஆய்வகங்கள் இல்லாதது, நூலகம், விடுதி மற்றும் விளையாட்டு மைதான வசதிகளில் கடுமையான பிரச்சினைகள் இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்தப் பிரச்சனைகள் நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகள், மாணவர்கள் சேர்க்கையை மாநில அரசு ஒழுங்குபடுத்துகிறதா அல்லது மத்திய அரசு ஒழுங்குபடுத்துகிறதா என்பதைத் தாண்டி இத்தகைய பிரச்சனைகள் எப்போதும் இருக்கக்கூடியவை தான்.
துயர் தரும் உண்மைகள்:
தேசிய அளவிலான தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) மூலமாக உணர்த்தப்படுவது என்னவென்றால் “உயர் கல்வி என்று வரும்போது, அதுவும் தொழில்முறைக் கல்வி நிறுவனங்களில், தகுதி மட்டுமே அளவுகோல்களாக இருக்க வேண்டும்” (மாடர்ன் பல் மருத்துவக் கல்லூரிக்கும் மத்திய பிரதேச மாநில அரசுக்கும் இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டபடி) ஒரு பொதுவான நுழைவுத் தேர்வு மட்டுமே தகுதியை நிர்ணயம் செய்வதாக இருக்கும். இந்தத் தேர்வானது அடிப்படை மாணவர் சேர்க்கைகள் நியாயமான முறையில் நடைபெறுதல், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் அல்லாத மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் என்ற அடிப்படையில் நிற்கிறது. நீட் தேர்வானது, இந்திய மருத்துவ கவுன்சிலால் (இப்போது மதிப்பிழந்து போன ஒரு அமைப்பு) கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை மூலம் “தகுதி”யின் பெயரால் இப்படி ஒரு குறுக்கு வழியிலான செயல்முறையை உருவாக்கியது. இப்போது இந்திய மருத்துவ கவுன்சிலானது, 2016 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட சட்டத்தின் பிரிவு 10 D யுடன் இணைக்கப்பட்டுள்ளது. “தகுதி” என்ற விவாதத்திற்குரிய பிரச்சினையை நான் மற்றொரு நாளுக்கு ஒதுக்கி வைக்கிறேன். இப்போது, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடைமுறையில் “நீட்” தேர்வு ஏற்படுத்திய விளைவுகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்த உண்மைகளில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
தயவுசெய்து உங்களை நீங்களே இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்:-
மாநில அரசுகள் ஏன் மாநில மக்களின் வரிப் பணத்தை செலவழித்து அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க வேண்டும்? மாணவர்கள் ஏன் அவரவர் தாய்மொழியில் (தமிழில்) பள்ளியில் படிக்க வேண்டும்?
மாணவர்கள் ஏன் மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்து அதில் தேர்வெழுத வேண்டும்? ஏன் ஒரு மாநில பாடத்திட்ட முறை இருக்க வேண்டும்? நகர்ப்புற மாணவர்கள் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் பணியாற்றுவார்களா? இவற்றுக்கான பதில்களை உங்கள் முன்னிருக்கும் புள்ளிவிவரங்கள் தரக்கூடும். “தகுதி” என்ற குழப்பமான கருத்தியல் மீது நின்று கொண்டு, “நீட்” தேர்வு சமத்துவமின்மை மற்றும் அநீதியின் சகாப்தத்தை சமூகத்தின் மீது சுமத்துகிறது