காணாமல் போன வேலைவாய்ப்புகள் – ப.சிதம்பரம்
விடுதலை பெற்ற இந்தியாவில் 1947 க்குப் பிறகு 10க்கு மேற்பட்டவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறதா? அர்த்தமற்ற கேள்வியாக இருக்கலாம், கேள்விக்கு விடை “ஆம்” என்பதுதான். 2013-14 க்குப் பிறகு என்று எடுத்துக்கொண்டாலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. போர், பஞ்சம் அல்லது இயற்கைப் பேரழிவுகளால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டால் ஒழிய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை, இயல்பான சூழலில் ஒரு கடற்பயணம் மேற்கொள்ளும் கப்பலில் உறுதியான பற்சக்கரங்கள் இல்லையென்றாலும் அது முன்னோக்கி நகரும் என்பதுதான் உண்மை.
உண்மையான கேள்வி என்னவெனில், 2013-14 க்குப் பிறகு ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறதா இல்லையா என்பதுதான், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கடைசி ஆண்டில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பாரதீய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்தது, கடந்த 7 ஆண்டுகளில் அவர்களுடைய ஆட்சித்திறன் இந்திய பொருளாதாரத்தில் 14 கோடி வேலைவாய்ப்புகளை முறைசார் மற்றும் முறைசாராத துறைகளில் உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை.
எவ்வளவு வேலைவாய்ப்புகள்?
சில நாட்களுக்கு முன்பு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒன்பது துறைகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களைக் குறித்த ஒரு கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டது, மொத்த வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மேற்கண்ட நிறுவனங்கள் (முறையான துறை) 85 சதவீதமாகும். 2013-14 ஆம் ஆண்டில் (ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு) 2.37 கோடியாக இருந்த மொத்த வேலைவாய்ப்பு இப்போது 3.08 கோடியாக இருக்கிறது, இந்த அறிக்கையின்படி ஏழு ஆண்டுகளில் 71 லட்சம் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது என்று இந்த அறிக்கை முடிவு செய்கிறது. பிற துறைகளை உள்ளடக்கும் எண்ணிக்கையை கூடுதலாக மதிப்பிடுவதன் மூலம், அதிகபட்சமாக 84 லட்சம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த அறிக்கை முறைசாராத துறைகள் மற்றும் விவசாயத் துறையை உள்ளடக்கவில்லை என்று தெரிகிறது. உற்பத்தியில் 22 சதவிகித வளர்ச்சி, போக்குவரத்துத் துறையில் 68 சதவீதம், தகவல் தொழில்நுட்பத்தில் (ஐடி / பிபிஓ) 152 சதவீதம் என்று இந்த வளர்ச்சி “மிகவும் ஈர்க்கக்கூடிய வளர்ச்சி” என்று அறிக்கை கூறுகிறது. ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இவை அனைத்தும் சேர்ந்து 71 லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கி இருக்கிறது.
காலமுறையிலான தொழிலாளர் கணக்கெடுப்பை அரசாங்கம் நிறுத்திவிட்டதால், நாம் மற்ற ஆதாரங்களைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசாங்கத்தின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுவதற்கு, “ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலான செயல்முறை” என்கிற தரவு முக்கியமானது.
பிற நம்பகமான தரவுகள்:
நம்பகமான வேலைவாய்ப்பு – வேலையின்மை குறித்த தரவுகளை இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (CMIE) சேகரித்து வெளியிட்டது. திரு.மகேஷ் வியாஸ், ஒரு சிறு குறிப்பில், செப்டம்பர் 2021 மூன்றாவது வார இறுதியில் இந்த மையத்தின் தரவுகள் குறித்த முடிவுகளை சுருக்கமாகக் கூறியுள்ளார். நான் அவற்றை ஒரு அட்டவணையில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன். “கோவிட்-19 இன் முடக்கங்களில் இருந்து இந்தியா மீண்டு வந்திருப்பது விரைவாகவே நிகழ்ந்திருக்கிறது, ஆனால், பொருளாதாரம் வறண்டு போய்விட்டது…” என்று சி.எம்.ஐ.இ சொல்வது சரிதான். வறண்டு போன பொருளாதாரம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எந்த வகையான மீட்பாகவும் இருக்கட்டும், வி அல்லது வேறு எந்த அகரவரிசை மீட்பாக இருந்தாலும், நாம் 2019-20 இல் அடைந்திருந்த மொத்த வேலைவாய்ப்பு அளவை எட்டாவிட்டால், அந்த அளவைத் தாண்டாவிட்டால், ‘மீட்பு’ என்பது வெறும் மாயத்தோற்றமாகத்தான் இருக்கும்.
மக்களுக்கு வேலை மட்டுமில்லை, வெளியோடு போதுமான வருமானம் இருக்க வேண்டும், முந்தைய அளவிலான வேலைவாய்ப்புகளை மீட்டெடுக்காத, அந்த அளவுகளைத் தாண்டாத எந்தவொரு பொருளாதார “மீட்சியும்” மக்களுக்கு பயனளிக்கப்போவதில்லை. தொழில்நுட்பம், புதிய இயந்திரங்கள், புதிய செயல்முறைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவை தேசத்தின் வளர்ச்சியைக் கொண்டு வர முடியும், ஆனால் அந்த வளர்ச்சி பழைய வேலைகளை மீட்டெடுக்கவில்லை அல்லது புதிய வேலைகளை உருவாக்கவில்லை என்றால், நம்முடைய ஆட்சித்திறனில் தான் பெரிய பிரச்சனை இருக்கிறது எண்டு பொருள். உண்மையில், இப்போது இந்தியா அத்தகைய பிரச்சினையைதான் எதிர் கொண்டுள்ளது என்பதை அரசாங்கம் பிடிவாதமாக ஒப்புக்கொள்ள மறுக்கிறது, இந்தப் பிரச்சினையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயாராக இல்லை.
அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறை மற்றொரு தீவிரமான பிரச்சினையைக் குறிக்கிறது. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) மற்றும் ஆகஸ்ட் 2021 இல் வேலைவாய்ப்பு விகிதம் இரண்டும் கடந்த பிப்ரவரி 2020 இல் இதே விகிதங்களை விடக் கணிசமாக குறைந்துள்ளது (அட்டவணையைப் பார்க்கவும்). ஆதாரப்பூர்வமான முடிவு என்னவென்றால், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள், தொழிலாளர் சந்தையில் இருந்து விலகிக் கொண்டு விட்டார்கள் (அதாவது, வேலை தேடுவதை நிறுத்திவிட்டனர்) மற்றும் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. இந்த இரண்டு விகிதங்களும் தலைகீழாக மாற்றப்படாவிட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை இரட்டிப்பாக்குவதற்கோ அல்லது ஜெர்மனி அல்லது ஜப்பான் போன்ற பெரிய பொருளாதாரங்களை விட வளர்ச்சியை விரைவாக எட்டவோ எந்த வழியும் இல்லை.
செப்டம்பர் 2020 மற்றும் செப்டம்பர் 2021 க்கு இடையில் மொத்த வேலைவாய்ப்பில் நிகர அதிகரிப்பையும் சிஎம்ஐஐ கணக்கிட்டுள்ளது, இது ஒரு மிகக்குறைந்த அளவான 44,483 ஐ காட்டுகிறது. ஏற்கனவே இருந்த வேலைகள் காணாமல் போய்விட்டன, புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன, ஆனால் 12 மாதங்களுக்கு மேலாக நிகர வேலைவாய்ப்பு அதிகரிப்பு வெறும் 44,483 என்றால், பொருளாதார மேலாண்மை, அமைச்சர்கள் மற்றும் பொருளாதார ஆலோசகர்களின் போலியான மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கள் பற்றி அது நமக்கு என்ன சொல்கிறது? திரு வியாஸ், பொருத்தமாக, இந்த “மீட்பு செயல்முறை முன்கூட்டியே வீழ்ச்சியைக் குறிக்கிறது என்று குறிப்பிடுகிறார். இது மிகத் தீவிரமானது, ஏனெனில் கூடுதல் வேலைகள் உருவாக்கம் தடைப்பட்டிருந்தாலும், உழைக்கும் வயது கொண்ட மக்கள் தொகை அதிகரிப்பது தொடர்ந்து நடைபெறுகிறது.
பாலின அடிப்படையில் ஒரு பகுப்பாய்வுக்கு இந்தத் தரவுகளை உட்படுத்தினால், மேலும் அதிர்ச்சிகரமான மனச்சோர்வு தரக்கூடிய முடிவுகள் கிடைக்கின்றன, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான வேறுபாட்டைப் பாருங்கள் அல்லது வேலைகளின் தரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தாலும், விவசாயத்துறைதான் பொருளாதாரத்தின் இரட்சகராக இருந்து வருகிறது. மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை 46 லட்சம் என்ற அளவில் கூடுதல் உழைப்பை அது உள்வாங்கிக் கொண்டது, ஆனால் கிராமப்புற இந்தியா அதே காலகட்டத்தில் 65 லட்சம் விவசாயம் சாராத வேலைகளை இழந்தது. மக்கள் விவசாயம் அல்லாத வேலைகளுக்கு மாறினர், ஆனாலும், இது மறைமுக வேலையின்மையாக மட்டுமே இருக்கும்.