பெருந்தொற்று கால உலகின் மாற்றங்கள் – ரத்தின் ராய்
கடந்த 50 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரக் கதை ஆசியாவின் எழுச்சி. முதலாவதாக, ஜப்பான், அதற்குப் பிறகு தைவான், கொரியா இறுதியாக சீனா. இந்த ஆசிய நாடுகளின் எழுச்சியை சரியாகச் விவரிக்க வேண்டுமென்றால் அரசியல் போராட்டம் மற்றும் எதிர்ப்பு ஆற்றல் இரண்டையும் சுற்றி கட்டப்பட்ட வளர்ச்சி. மக்கள் நலனில் கவனம் செலுத்தும் சர்வாதிகார ஆசிய அரசுகள் திறமையானவையாகவும் மாற்றப்படக் கூடியவையாகவும் கருதப்பட்டன.
ஆசியாவின் எழுச்சியை விவரிக்கும் பெரிய புத்தகங்கள் இதை கன்பூசியஸ் மதிப்பீடு, ஒழுக்கம் மற்றும் கூட்டு செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் உயர் செயல்திறன் ஆகியவற்றின் பயனாக விளைந்தவை என்று விவரித்தன. பெருந்தொற்றின் துவக்க காலத்தில், நோய்ப் பரவலை எதிர்கொள்ள ஆசிய நாடுகள் செய்த முயற்சிகளின் வெற்றி இந்த கருத்துக்களை மேலும் வலுவூட்ட உதவியது.
ஆனால் நிலைமை தொடர்ந்து சிக்கலான போது, ஆசியப் புலிகள் என்றழைக்கப்பட்ட இந்த நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும், பொருளாதார முன்னேற்றத்தைப் பராமரிக்கவும் போராட வேண்டியிருந்தது. சீனாவை இதில் விதி விலக்காக்கிக் கொள்ளலாம். ஆனால் சீனாவின் தனித்த வளர்ச்சி உலகளாவிய வளத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மாறாக சீன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான ஓநாய்ப் போர்த் தந்திரமாக இது பார்க்கப்படுகிறது.
இரண்டு வெவ்வேறான வேகங்களில் உலகம்
உலகமயமாக்கல் நிகழ்வு தொடர்ச்சியான ஒருங்கிணைப்பின் மூலமாக வளர்ச்சியை சாத்தியப்படுத்தியது. அதன் வேகமும் அதன் உலகளாவிய தாக்கமும் பரவிய போது, உலகெங்கிலும் வளர்ச்சி மேலோங்கி வருவதாக நம்பப்பட்டது. தீவிரமான வறுமை நிலையும், நாடுகளுக்கு இடையிலான சமத்துவமின்மையும் ஒரு நிலையான வீழ்ச்சி கண்டன.
ஆனால், இந்தப் பெருந்தொற்று இப்படியான கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் இது குறித்துக் கூறுகையில், “அமெரிக்காவும், சீனாவும் மட்டுமே இந்த ஆண்டில் பெருந்தொற்றுக்கு முந்தைய பொருளாதார நிலைக்குத் திரும்பும்” என்கிறார். உலகின் பெரும்பாலான நாடுகள் 2023 வரை அத்தகைய மீட்சியை அடையும் என்று எதிர்பார்க்க முடியாது.
தொற்றுநோய்க்கு முந்தைய கணிப்புகளுடன் ஒப்பிடும் போது அடுத்த நான்கு ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தில் சராசரி ஆண்டு இழப்பு விகிதம் முன்னிலைப் பொருளாதார நாடுகளில் 2.3 சதவீதமாகவும், வளர்ந்து வரும் சந்தையைக் கொண்ட நாடுகளில் 4.7 சதவீதமாகவும், குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு 5.7 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. துயரமான விஷயம், 2020ல் கூடுதலாக 95 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டு ஏழைகளின் வரிசையில் இணைந்து கொள்வார்கள்.
தலைகீழான பெரும்-பொருளாதாரக் கொள்கையின் துவக்கம்
இது 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியுடன் தொடங்கியது. சர்வதேச நாணய நிதியத்தின் வழக்கமான பொருளாதார வல்லுநர்களும், வளர்ந்து வரும் நாடுகளின் கொள்கை வடிவமைப்பில் உள்ள அவர்களின் சோம்பேறித்தனமான கூட்டாளிகளும் தீட்டும் வழக்கமான பொருளாதாரக் கொள்கை இப்போது முடிவுக்கு வருகிறது. கடந்த ஆண்டு கூட, இந்தியப் பொருளாதார வல்லுநர்கள் பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் பொருளாதார மீட்புக்க்கான எதிர்சுழற்சி நடவடிக்கைகள் என்று வெளிப்படையாகப் பேசுவார்கள். ஆனால், இந்த வகையான தோல்வியுற்ற பொருளாதாரப் பகுப்பாய்வு இனி செல்லுபடியாகாது.
இந்த தொற்றுநோயின் புள்ளிவிவரங்களால் இயக்கப்படும் பொருளாதாரம் என்று அழைக்கப்படுவதன் போலியான தோற்றத்தையும் அம்பலப்படுத்துகிறது, ஏனெனில் கடந்த கால வரலாற்றில் இருந்து எதையும் துல்லியமாக மதிப்பிட முடியாது. இங்கிலாந்து வீட்டுச் சந்தை விலைகள் அல்லது இந்தியாவின் பணவீக்கத்தை எது வழி நடத்துகிறது? போன்ற ஏட்டுச் சுரைக்காய், வெற்று பொருளாதார பயிற்சிகள் இப்போது நகைப்புக்குரியவை.
“கடன் இயக்கவியல்” பற்றிய மூன்றாம் விகித அனுபவங்களின் அடிப்படையில் நிதியியல் குறித்த பேச்சு, நான் இந்தியாவின் FRPM-Fiscal Responsibility and Budget Management கட்டமைப்பில் பணியாற்றியபோது எனக்கு மிகவும் எரிச்சலூட்டியது. மூன்று இலக்க கடன் சுமை, மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதங்கள் இப்போது நிதி நிலைத் தீர்வு அல்லது நிதிக் கொள்கைத் தீர்வை வெளிக்காட்டுவதில்லை. மாறாக, நான் தொடர்ந்து வாதிட்டு வரும் நிலையில், கடன் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் கடன் வாங்கிய பணமானது பொருளாதார வளர்ச்சியில் ஆற்றிய பங்கு மற்றும் விளைவுகள் என்ன என்பது தான் இப்போது முக்கியமானது.
நிதிய விவேகம் பற்றிய மேலோட்டமான பொதுக் கருத்துகள் மேக்ரோ-நிதிக் கட்டமைப்பை வடிவமைப்பதை இனி ஒருபோதும் தடுக்க இயலாது. தேவைப்படும் விஷயங்களை வழங்குவதும், வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதும் பொதுச் செலவினங்கள், வரிவெட்டுக்கள் மற்றும் பற்றாக்குறைக் கட்டுப்பாட்டை விட அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயங்களாகப் பார்க்கப்படுகிறது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த உதவும் கொள்கைகள் தான் சிறந்த பொருளாதாரக் கொள்கைகளாக இருக்க முடியும்.
மரபுசார்ந்த பழைய போர்முறை
போர்கள் மூத்தவர்களைப் பாதுகாக்க இளைஞர்களால் நடத்தப்படுகிறது. பெருந்தொற்றுக்கு எதிரான செயல்பாடுகளும் அப்படியான ஒரு போரைப் போலத்தான் தோன்றுகிறது. (குழந்தைகள் கோவிட் பெருந்தொற்றால் இறப்பதில்லை. ஆனால், அவர்கள் நோயைப் பெரியவர்களுக்குப் பரப்புகிறார்கள், ஆகவே அவர்களும் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும்) இளையவர்களின் கல்வி இப்போது தடைப்பட்டிருக்கிறது. அவர்களின் வேலைவாய்ப்பு குறைந்து போயிருக்கிறது. வயதானவர்கள் வசதி வாய்ப்புகளோடு கொழுத்து வளரும்போது இளையவர்கள் சவால்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் செயல்திறனை இந்தக் கட்டுப்பாடுகள் கடுமையாகப் பாதிக்கின்றன. அவர்கள் இயங்கவும், நட்புடன் இருப்பதற்கும், நேசிப்பதற்கும் புதியவற்றை முயற்சி செய்வதற்குமான சூழல் இங்கில்லை. இந்த நிலையை நீங்கள் உலக நாடுகளின் பொருளாதார நிலையோடும் பொருத்திப் பார்க்க முடியும்.
நுட்பமான தனிமைப்படுத்தல்
நாம் வாழும் பூமியையும், அதன் சமூகங்களையும் இயல்பாகவும், உத்வேகத்துடனும் வைத்திருப்பது இளைஞர்கள்தான். அவர்கள் மீது தொற்றுநோயின் எதிர்மறை தாக்கம் நாம் வாழ்நாளில் சந்தித்திராத அளவிற்கு சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த தொற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொருளாதார, சுகாதாரப் பாதுகாப்பு தீர்வானது மனிதர்களைப் பிரிப்பதும், தனித்திருக்க வைப்பதுமாகும். ஆற்றல் வாய்ந்த செல்வந்தர்கள் தங்களை பாதுகாக்கக் கொடுக்கும் விலையானது ஏழைகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்குகிறது. பணக்கார நாடுகள், ஏழை நாடுகளின் வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை சிறப்பாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இந்தியாவில், இந்த நுட்பமான தனிமைப்படுத்தல் மிக வெளிப்படையாகத் தெரிந்தது. ஏராளமான மக்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் தொடர்ந்து வாழும் சூழல் இல்லை. அங்கிருந்து ஏறத்தாழ அவர்கள் துரத்தப்பட்டார்கள், அவர்களின் பாதுகாப்பிற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அவர்கள் தான் “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (migrant workers).” எனவே, இந்த பாதுகாப்பற்ற, வேலைவாய்ப்பற்ற, கடினமான காலங்களில் பாதுகாப்பாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
ஆனால் அதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை மேற்கோள் காட்டி, காவல்துறையினரின் வன்முறை அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. அவர்கள் நவீன போக்குவரத்து வழிகளைக் கையாள்வது தடுக்கப்பட்டது. அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கடுமையான வெயிலில் பல நாட்கள் நடந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டார்கள். அப்போது வெளியான புகைப்படங்கள் நாட்டின் பஞ்ச காலம், வறுமை மற்றும் போர்க் காலங்களின் படங்களை நினைவூட்டியது.
புலம் பெயரும் தொழிலாளர்கள், தாங்கள் வேலை பார்த்து வரும் ஒருங்கிணைந்த அடுக்குமாடிப் பகுதிகளில் வாழும் பணக்கார சீமான்கள், தங்கள் வாழ்க்கைக்கான எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தனர். ஏனெனில் அவர்கள் “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” மட்டுமே. அதற்கு மேல் அவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லை. எந்த வேலையும் இல்லாமல் அவர்களுக்கு பயன்களை வழங்கவோ, பாதுகாக்கவோ எந்த சட்டப்பூர்வமான வழியும் இல்லை. இதயபூர்வமான வழியும் இல்லை. அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சியானது அவர்கள் இழந்த வருமானத்தை மீட்கவோ, அவர்களுக்கு ஆதரவு வழங்கவோ சாதகமாக இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
தேசத்தின் லாபமானது கடன் அபாயத்தில் இருக்கும் பெருமுதலாளிகளுக்கு மலிவான கடன் வழங்கவும், அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் ஒதுக்கப்பட்டது. இந்தியாவின் ஏழைகளைப் பொறுத்தவரை, நுட்பமாகத் தனிமைப்படுத்தல் என்பது “சேவை” என்று பொருள்படும். அவர்கள் வாழ்வதற்கும், சாப்பிடுவதற்கும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், பணக்காரர்களைப் போல வளமான வாழ்க்கையை நோக்கி அவர்கள் செல்வதற்கு மட்டும் அனுமதி இல்லை.