கவலை தரும் பொருளாதாரம், உறங்கும் ஆட்சியாளர்கள் – ப.சிதம்பரம்
சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டைத் தொடக்கி இருக்கிறோம், இந்தியா வியக்க வைக்கும் வகையில் மாறிவிட்டது, ஆனால், மாறாமல் இருக்கும் இந்தியாவை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், ஒரு பயணியாக உத்திரப்பிரதேசம், பீகார், ஒடிஷா மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் பயணம் செய்து பாருங்கள், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த அதே இந்தியாவை உங்களால் பார்க்க முடியும், மக்களின் பொருளாதார, சமூக நிலை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. குற்றம் சுமத்துவது எனது நோக்கமல்ல, நவீன இந்தியாவை உருவாக்க நாம் செய்ய வேண்டிய பணிகளை நினைவூட்டுதே எனது நோக்கம்.
நமது உடனடி இலக்கு மிகப்பெரியதல்ல, 2019-20 ஆம் ஆண்டில் நிலையான விலைவாசியுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 145.69 லட்சம் கோடியாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் 73 ஆண்டுகளுக்குப் பிறகு தொற்றுநோய்க்கு முன்பாக நாம் அடைந்த பொருளாதார நிலை இது. பொருளாதார அடிப்படையில் பார்த்தால், இந்தியாவின் கடந்த 29 ஆண்டுகள் மிகுந்த உற்பத்தித் திறன் கொண்டவை. 1991 க்கும் 2014 க்கும் இடைப்பட்ட காலத்தில் GDP நான்கு மடங்காக அதிகரித்தபோது, மிகப்பெரிய வளர்ச்சியாக அது இருந்தது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வளர்ச்சி விகிதம் சுமாராகவும், ஏற்றத்தாழ்வுகளோடும் தான் இருக்கிறது, உள்நாட்டு சிக்கல்கள், உலகளாவிய சூழல் மற்றும் கோவிட் பெருந்தொற்று என்று இதற்குப் பல காரணங்கள் உண்டு. தொற்றுநோய்க்கு முன்பிருந்த GDP அளவான 145.69 லட்சம் கோடியை எட்டுவதே இப்போதைய நம்முடைய குறைந்தபட்ச இலக்கு.
இது குறித்த காரசாரமான விவாதங்கள் நடக்கிறது, ஆகஸ்ட் 6, 2021 இல் வெளியான இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிக்கை தான் இந்த விவாதத்தைத் துவக்கி வைத்தது. (இது குறித்த விவாதம் நடைபெறாத ஒரே இடம், நம்முடைய நாடாளுமன்றம் மட்டும்தான்). நிதிக் கொள்கை அறிக்கை (MPC) ஒரு புறம் என்றால், மறுபுறம் போலியான ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு உறுதிமொழியையோ, விழித்துக் கொள்வதற்கான செய்தியையோ அது வழங்கவில்லை. வெளிப்படையாகவும், ஒளிவுமறைவின்றியும் இல்லாமல் இருப்பதற்கு நாம் கொடுக்கும் விலை இது.
இந்திய ரிசர்வ் வங்கி முன்வைக்கும் தீர்வு நிதி மற்றும் விலைவாசியில் ஒரு நிலைத்தன்மை. 1991 ஆம் ஆண்டிலிருந்து ரிசர்வ் வங்கி சிறப்பாகப் பணியாற்றியது, ஆனால், சில தவறுகளையும் செய்தது. வளர்ச்சியை பெரிய அளவிலும், பணவீக்கத்தை குறைந்த அளவிலும் அது கணித்தது, இந்த இரண்டு தவறுகளும் அரசின் மெத்தனப் போக்கை வெளிக்காட்டியது. இப்போது, ஆகஸ்ட் 6, 2021 வெளியான அறிக்கையிலும் இதே தவறை ரிசர்வ் வங்கி செய்திருக்கிறது. 2021-22 ஆம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு வளர்ச்சியை (GDP) 9.5 சதவிகிதம் என்று கணித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இது மணலில் கட்டப்பட்ட வீட்டைப் போல காட்சியளிக்கிறது, காலாண்டு முடிவுகள் மூலமாக இதனை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
Q 1 – 21.4 %
Q 2 – 7.3 %
Q 3 – 6.3 %
Q 4 – 6.1 %
2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிகழ்ந்த எதிர்மறையான (-) 24.4 % GDP யின் விளைவே 2021-22 இன் உயர் வளர்ச்சி விகிதம், அடுத்த மூன்று காலாண்டுகளுக்கான மதிப்பீடுகள் இயல்பானவை ஆனால் மிகுந்த சோர்வை உருவாக்குபவை. வளர்ச்சி விகிதமானது கீழ்நோக்கிச் செல்லும் நாட்களுக்கு நாம் திரும்பி இருக்கிறோம், இந்த எண்கள் பொருளாதார மீட்சியைக் குறிக்கவில்லை, மிகக் குறைவான ஒரு V வடிவ மீட்சி அது, பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமாகவே இருக்கிறது.
பணவீக்கமும் & வேலைவாய்ப்பின்மையும்.
2021-22 ஆம் நிதியாண்டில் பணவீக்கத்திற்கான கணிப்பு:
Q 1 – 6.3 %
Q 2 – 5.9 %
Q 3 – 5.3 %
Q 4 – 5.8 %
இந்த எண்களுக்குப் பின்னால் உணவுப் பொருட்களின் பணவீக்கம் உயர்ந்திருப்பதும் ஒளிந்திருக்கிறது, எரிபொருள் பணவீக்கம் இரண்டிலக்க அளவுக்கு உயர்ந்திருக்கிறது, பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது, குறிப்பாக கச்சா எண்ணையின் விலை, வளர்ந்து வரும் சந்தைகளின் பணமதிப்பு குறைந்திருக்கிறது, பணவீக்கத்தின் விளைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் பத்திரங்களின் அளவு அதிகரித்துள்ளது. நிதிக் கொள்கை அறிக்கை அரசுக்கு சொல்லும் அறிவுரை “மறைமுக வரிகளின் அளவை மத்திய மாநில அரசுகள் குறைப்பது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உதவும்”, வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளைக் குறைக்க வேண்டும்.
நடைமுறை உண்மைகளோ, நிதிக் கொள்கை அறிக்கையின் எச்சரிக்கைகளோ அரசின் நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை, கீறல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டைப் போல ஒரே பாடலின் வரியைத் திரும்பத் திரும்ப இசைப்பதைப் போலிருக்கிறது அரசு. ஜூலை 2021 க்கான நிதி அமைச்சகத்தின் மாதாந்திர மறு ஆய்வு அதே பழைய பல்லவியைப் பாடுகிறது. கோவிட்-19 இன் இரண்டாவது அலை குறைப்பு, தடுப்பூசி செலுத்துவதில் விரைவான முன்னேற்றம் (?), வளர்ச்சிக்கான உயர் அறிகுறிகள், ஜிஎஸ்டி வரி வசூலிப்பில் சாதனை, மே மாதத்தின் மத்தியில் இருந்து பொருளாதார புத்துணர்ச்சிக்கான வெளிப்படையான அறிகுறிகள் உள்ளன”.என்று மீண்டும் மீண்டும் அதே பச்சைப் பொய்கள்.
அறியாமையில் இன்பம் காண்பது.
உலகப் பொருளாதாரத்தில் நிகழும் மாற்றங்களையும், சமூக பொருளாதார அடுக்கின் கடைசியில் இருக்கும் மக்களின் துயரங்களையும் இந்த அரசு பரிசீலிக்கத் தவறி இருக்கிறது, ஆகஸ்ட் 12, 2021 நிலவரப்படி இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்ட புள்ளிவிவரங்கள், “30 நாட்களுக்கு ஒருமுறை மாறும் சராசரி நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.79 சதவீதமாகவும், கிராமப்புற வேலையின்மை விகிதம் 6.86 சதவீதமாகவும் இருந்தது” என்கிறது.
கிராமப்புற இந்தியாவில், இயல்பான வேலைகள் (பருவகாலத்தில் நடக்கும் விவசாய வேலைகளுக்கு நன்றி) அதிகரிப்பதாகவும், வழக்கமான, கூலி வேலைகள் பல்வேறு இடங்களில் பெருமளவில் இழக்கப்பட்டதாவும் CMIE தெரிவித்துள்ளது. நிதித்துறை அமைச்சகத்தின் அறிக்கை வெளியான அன்று, “தொழில் துறையினர் ஏன் அபாயங்களை எதிர்கொண்டு முதலீடு செய்யவில்லை? என்று கேட்டார் பிரதமர். வருவாய் செயலாளர் “ஏன் அதிக வேலைகள் உருவாக்கப்படவில்லை? என்று ஆச்சரியமாகக் கேட்டார், வணிகச் செயலாளர் “சுதந்திரமான வணிக ஒப்பந்தங்களை (அரசாங்கம் கைவிட்ட பாதை) உருவாக்க உங்கள் ஆதரவு வேண்டும்” என்று தொழில்துறையிடம் கெஞ்சினார்! ஒரே குரலில் ஒலிக்க வேண்டிய அரசின் வெவ்வேறு குரல்கள் இவை.
உலகப் பொருளாதாரத்தின் நிலையை “தி எக்கனாமிஸ்ட்” இதழ் கணித்திருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் குறித்து அது இவ்வாறு கூறுகிறது, “கோவிட்-19 இன் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற தன்மை இந்த நாடுகளை மெதுவான, மிக நீண்ட கால வளர்ச்சிக்கு கொண்டு செல்லும்”.
வளர்ந்த நாடுகளில், அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், நுகர்வோர் தேவைகள் குறைதல், உலகளாவிய வணிகத் தேக்கமடைதல் மற்றும் வளர்ந்து வரும் மந்தமான, பாதுகாப்புவாதப் பொருளாதாரம் போன்றவற்றை அது சுட்டிக் காட்டுகிறது. “ஒட்டுமொத்தமாக, வளர்ந்து வரும் நாடுகளின், குறிப்பாக தடுப்பூசி போடுவதில் தடுமாறிக் கொண்டிருக்கும் நாடுகளின் பொருளாதாரம் அவ்வளவு பிரகாசமாக இல்லை” என்கிறது “தி எக்கனாமிஸ்ட்”.
ஒவ்வொரு நாடும் தடுப்பூசி போடும் வேகத்தை மீண்டும் இரட்டிப்பாக்க வேண்டும், அதன் பொருளாதாரக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவின் ஆட்சியாளர்களோ இந்த சவாலான சூழ்நிலையைப் பற்றி உணராதவர்களாக அறியாமையில் உழல்வது போல் தெரிகிறது, தடுப்பூசி விஷயத்திலும் சரி, பொருளாதார மேம்பாட்டிலும் சரி நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பதுதான் உண்மை.
நீங்களும், என்னைப் போலவே இது குறித்த அக்கறை கொண்டவர்களாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், எது எப்படியோ, இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்து.