விரைவில் பணக்காரராக வேண்டுமா ? – இந்த 8 பழக்கங்களை உடனடியாக நிறுத்துங்கள் !
நீங்கள் சம்பாதிக்கிற பணமெல்லாம் எங்கே போகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மாத இறுதியில் உங்கள் வங்கிக் கணக்கில் ஏன் பணமில்லாமல் போகிறது என்று கவலைப்படுகிறீர்களா? கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகளில் உங்கள் பணம் கரைந்து காணாமல் போவதைக் குறித்து உங்களுக்கு வருத்தமா?
ஆம், என்றால் நீங்கள் சரியான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள்.
ஓரளவு திருப்திகரமான சம்பளம் வாங்கியபோதும் உங்களால் ஏன் பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதற்கான காரணங்களை விளக்குகிறது இந்தக் கட்டுரை, கௌரவமான சம்பளம் வாங்கிய போதும் சேமிக்க முடியாமல் உங்கள் பணத்தைக் கரைக்கும் 8 தீய பழக்கங்களைக் கூர்ந்து கவனியுங்கள்:
1) வருமானம் அதிகரிக்கும் போது, செலவுகளை அதிகரிக்காதீர்கள் !
உங்களால் இயன்ற அளவுக்கு உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதில் தவறில்லை, ஆனால், தொடர்ந்து செலவழிப்பதையே பழக்கமாகக் கொண்ட மனிதராக நீங்கள் இருந்தால் விரைவிலேயே வாழ்வின் கடினமான காலத்தை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் போதும் சரி, அதே பழைய வருமானத்துடன் நீங்கள் இருக்கும் போதும் சரி, உங்கள் செலவுகள் மட்டும் தொடர்ந்து உயருமேயானால், உங்களால் நிச்சயமாக சேமிக்க முடியாது. நீங்கள் உடனடியாக உங்கள் வருமானத்தை அதிகரிக்கத் தேவையான வழிகளைத் தேடியாக வேண்டும், அதே நேரத்தில் உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும், அதுதான் பொருளாதார வெற்றிக்கான முதல் வழி.
2) எதிர்காலம் குறித்த கவலை இல்லாமல் இருக்காதீர்கள் !
வழக்கமாக வாழ்க்கையில் ஒரு சிக்கலை சமாளிப்பது கடினமாக இருக்கும்போது, நாம் அதை புறக்கணிக்க முடிவு செய்கிறோம், இந்தப் பழக்கம் உங்களை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் நடைமுறை, இது நிதி விஷயங்களுக்கும் பொருந்தும், பொதுவாகவே மனிதர்கள் தற்போதைய தேவைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், எதிர்காலத் தேவைகளை ஏதாவது ஒரு வழியில் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள், ஆனால், எந்த ஒரு நிதி சார்ந்த முடிவை நிகழ்காலத்தில் எடுக்கும்போதும் எதிர்காலம் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும், எதிர்காலத்துக்காக சேமிக்க உங்களால் இயன்ற சிறப்பான விஷயங்களை நீங்கள் செய்தாக வேண்டும்.
3) சேமிப்பதற்குத் தகுந்த வயதை நாம் எட்டவில்லை என்று நினைக்காதீர்கள் !
சேமிக்கத் தகுதியான வயதை நாம் இன்னும் அடையவில்லை என்ற எண்ணம் உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும், இளமைக்காலத்தில் பணத்தால் பெறக்கூடிய பல்வேறு நுகர்வுப் பொருட்களால் ஈர்க்கப்படுவது இயல்பு, பொதுவாக இளைஞர்கள் சேமிப்பது அல்லது முதலீடு செய்வதற்கான வயதை நாம் எட்டவில்லை என்று நினைக்கிறார்கள், இந்த எண்ணம் முற்றிலும் தவறானது, உங்கள் வருமானம் குறைவோ, அதிகமோ, வருமானத்தின் ஒரு பகுதியை சேமிப்பதற்கு வயது ஒரு தடையில்லை, இன்றே சேமிக்கத் தொடங்குங்கள், செலவழிப்பதற்கு முன்பாக முதலில் சேமிக்கத் துவங்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள், உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிப்பிற்கு ஒதுக்கி விட்டு மீதமுள்ளதை செலவழியுங்கள்.
4) உங்கள் வருமானத்தையும், செலவையும் பதிவு செய்யாமல் இருக்க வேண்டாம் !
பணத்தைப் பற்றிய குறிப்புகளை நாம் ஆவணப்படுத்தவில்லை என்றாலும் கூட, அது எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது என்று நமக்குத் தெரியும் என்று பலரும் தவறாக நினைக்கிறோம், அது ஒருபோதும் உண்மையல்ல, நமது மிக முக்கியமான செலவுகளை பற்றி நாம் அறிந்திருக்கலாம், ஆனால், நாம் சிறிய விஷயங்கள் என்று நினைப்பவை தான் பெரிய அளவில் நமது பணத்தை விழுங்குகிறது, உங்கள் வருமானமும், செலவுகளும் சிறியதோ, பெரியதோ ஒரு சிறு நோட்டில் அவற்றைக் குறித்துக் கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்வது உங்கள் நிதி நிலையைக் கட்டுப்படுத்த மிகச்சிறந்த வழியாகும்.
5) வரவு-செலவுத் திட்டம் இல்லாமல் இருக்க வேண்டாம் !
ஒருவேளை நீங்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி இருக்கலாம், இருப்பினும் துவக்கப்புள்ளியான வரவு-செலவுத் திட்டம் இல்லாமல் அது பயனளிக்காது, நடைமுறைக்கு சாத்தியமான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டம்தான் உங்கள் பொருளாதாரத் திட்டமிடுதலுக்கும் வெற்றிக்கும் அடிப்படை, ஆகவே ஒரு வரவு-செலவுத் திட்டத்தைக் கடைபிடியுங்கள், உங்கள் பணத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது, வரவு-செலவுத் திட்டம் உங்களிடம் இல்லாத போது நீங்கள் வெகு எளிதாக தேவையற்ற செலவுகளுக்குள் சிக்கிக் கொள்வீர்கள்.
6) உங்கள் தேவைகளுக்கும், ஆசைகளுக்குமான வேறுபாட்டை அறியாமல் இருக்காதீர்கள் !
நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால், செல்வம் சேர்க்க விரும்பினால், முதலில் அறிந்து கொள்ள வேண்டியது, எது நமக்குத் கண்டிப்பாகத் தேவை, எது இருந்தால் நல்லது மற்றும் எது தேவையற்றது என்பதை சரியாகப் புரிந்து கொள்வது. நமது நிதி சார்ந்த இலக்குகளை வரிசைப்படுத்திக் கொள்வது முக்கியம், நீங்கள் பணக்காரராவது உங்கள் முதன்மையான இலக்கு என்றால், நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ நிகழ்கால செலவுகள் பலவற்றை தவிர்க்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும், உங்கள் இலக்குகளைக் எழுதி வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மதிப்பீடு செய்வது மிக முக்கியமானது.
7) கடன்களைப் கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள் !
இன்றைய உலகில் பெரும்பாலான மனிதர்களின் வருமானத்தில் கணிசமான பகுதியை வட்டி விழுங்குகிறது என்பதுதான் கசப்பான உண்மை, கடன்களிலிருந்தும், வட்டி கட்டுவதில் இருந்தும் எப்படி வெளியேறுவது என்று புரியாமல் பலரும் தவிக்கிறார்கள், குறைந்த அளவு பணத்தைக் கூட சேமிக்க முடியாமல் திணறுகிறார்கள், எப்போதும் உங்கள் நிதி மேலாண்மையில் கடன்களை அடைப்பதை முதன்மையாக வைத்திருங்கள், அதற்காகத் திட்டமிடுங்கள், கடன்களால் கடைசி வரை ஏழையாகவே வாழ நினைக்காதீர்கள்.
8) தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிருங்கள் !
புதிய கேட்ஜெட்களுக்கும், நவீன மின்னணுப் பொருட்களுக்கும் எல்லைகளே இல்லை, அவை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும், உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் ஒரு பொருளை வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால், உங்கள் மொபைல் போனின் அடுத்த புதிய மாடல் வந்துவிட்டது என்பதற்காக அதை நீங்கள் வாங்க நினைப்பது உங்களை நிதிச் சிக்கல்களில் கொண்டு போய் நிறுத்தும்.
உங்கள் வாழ்க்கையை இன்றே உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள், எது தேவையோ அதை உடனடியாக செய்யத் துவங்குங்கள், செல்வந்தராக மாறுவதற்கான உங்கள் பயணத்தை நீங்கள் தான் துவங்க வேண்டும், வில்லியம் சாட்னர் சொன்னதைப் போல “சேமிப்பது தவறென்றால், நான் சரியானவனாக இருக்க விரும்பவில்லை.”