ரப்பர் செருப்பணிந்த எளியவர்கள் விமானத்தில் பறப்பதா? முதலில் சொந்தமாக ஒரு சிறியரக பைக் வாங்க முடியுமா பார்ப்போம்…
ஆட்டோ துறையின் குமுறல்:
கார்ப்பரேட் இந்தியா அரிதாகவே அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும். எனவே, ஆட்டோ தொழிற்துறையின் இருபெரும் தலைகள், தங்கள் துறை குறித்து அரசு கூறுவதொன்று நடப்பது வேறொன்றாக இருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது வியப்பாகவே உள்ளது.
மாருதி சுஸுகியின் தலைவர் ஆர். சி. பார்கவா கூறியது போல்: “ஆட்டோ தொழிற்துறையின் முக்கியத்துவம் குறித்து [அரசாங்கத்தால்] நிறைய அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், துறையின் போக்கில் சரிவை மாற்றியமைக்கும் உறுதியான நடவடிக்கையின் அடிப்படையில், இதுவரை ஒன்றையும் காணவில்லை.”
வாகன விற்பனை சறுக்கல்:
வாகன விற்பனை சில ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. பெருந்தொற்றுப் பரவல் நிலைமையை மேலும் மோசமாக்கியது. கோவிட்-19 தாக்குதலுக்கு முன்பாக 2018-19 ஆம் நிதியாண்டில் உள்நாட்டு வாகன விற்பனையானது 21.18 மில்லியன் யூனிட்களாக உச்சத்தை தொட்டிருந்தது, அதன் பின் 2019-20-ல் 17.42 மில்லியன் யூனிட்களாகவும், 2020-21-ல் மேலும் சரிந்து 15.12 யூனிட்களாக சரிந்துவிட்டது.
2018-19-ல் 3.38 மில்லியன் யூனிட்களாக இருந்த பயணிகள் கார் விற்பனையானது, 2019-20-ல் 2.77 மில்லியன் யூனிட்களாகவும், 2020-21-ல் 2.71 மில்லியன் யூனிட்களாகவும் சரிந்திருக்கிறது. அதேபோல, வணிக வாகனங்களின் விற்பனை 2018-19-ல் ஏறத்தாழ 1 மில்லியன் யூனிட்களாக இருந்து 2020-21-ல் 0.57 மில்லியன் யூனிட்களாக சரிந்தது.
ட்ராக்டர் விற்பனை மட்டும் 2018-19 இல் 0.79 மில்லியன் யூனிட்களில் இருந்து 2020-21 ஆம் நிதியாண்டில் 0.90 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது, கிராமப்புறங்களில் இருக்கும் செல்வந்தர்கள் பெரும்பாலான மக்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பதை நமக்குக் கூறுகிறது. இதிலிருந்து கோவிட் தாக்குதலுக்கு முன்பாகவே வாகன விற்பனை வீழ்ச்சியின் பெரும்பகுதி துவங்கி விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. மோட்டார் வாகன விற்பனையில் காணப்படும் இந்த மந்தநிலை பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விளைவுகள்
மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள், தங்கள் வாகனங்களுக்குத் தேவையான பெரும்பாலான உதிரி பாகங்களை தாங்களே உற்பத்தி செய்வதில்லை, பிற உதிரிபாக தயாரிப்பாளர்களிடமிருந்து ‘அவுட்சோர்ஸ்’ முறையில் வாங்குகின்றனர். ஆகவே, விற்பனையில் வீழ்ச்சி நிகழுமேயானால் உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்து சங்கிலி தொடராக சார்பு உற்பத்திகளையும், ஆயிரக்கணக்கான வேலை ஒப்பந்தங்களை இழக்கும் வகையில் தனி மனிதர்களையும், வேலைவாய்ப்புகளையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
ஏன் இந்த மந்தநிலை?
வணிக வாகனங்களைப் பொறுத்தவரை, இது பொருளாதாரத்தில் புதிய முதலீடுகள் ஏதுமில்லாததால் நடக்கும் நேரடி விளைவாகும். இரு சக்கர மற்றும் பயணிகள் கார் விற்பனை மந்தத்துக்கான பதில் சற்று விரிவானது. கோவிட் பெருந்தொற்றும் இந்த எதிர்மறையான பொருளாதாரத் தாக்கத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால், கவனிக்க வேண்டியது என்னவென்றால் கோவிட் இல்லாத 2019-20 – ல் கூட விற்பனை சரிந்திருந்தது.
விற்பனை சரிவிற்கு ஒரு காரணம் விலை அதிகரிப்பு. ஆர்.சி.பார்கவா பேசிய அதே நிகழ்ச்சியில் டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன் கூறியது போல், “மொபெட்டின் விலை 45 முதல் 50 % உயர்ந்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி, மொபெட்களை ஆடம்பரத் தயாரிப்பைப் போலக் காட்டுகிறது.”
2018-19 ஆம் ஆண்டில் 0.88 மில்லியனில் இருந்த மொபெட் விற்பனை, 2019-20 ஆம் ஆண்டில் 0.64 மில்லியனாகவும், 2020-21 ஆம் ஆண்டில் 0.62 மில்லியனாகவும் வீழ்ச்சியடைந்தது. ஜி.எஸ்.டி யைத் தவிர, பாரத் ஸ்டேஜ் – 6 விதிமுறைகள், காப்பீட்டு செலவுகளின் அதிகரிப்பு மற்றும் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற தொடர்ச்சியான அரசின் புதிய கட்டளைகளின்படி இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வு, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில், மக்களை பின்னுக்குத் தள்ளுவதற்கான மற்றொரு எதிர்மறை பொருளாதாரக் காரணியாக உள்ளது. மும்பையில் 2016-17 ஆம் ஆண்டில் பிராண்டட் அல்லாத பெட்ரோலின் விலை லிட்டருக்கு சராசரியாக ₹ 71.4 ஆக இருந்தது. இது ஜூலை 2021 ல் சராசரியாக லிட்டருக்கு ₹107.2 ஆக உயர்ந்திருக்கிறது. மும்பையில், டீசல் விலை 2016-17 ஆம் ஆண்டில் சராசரியாக லிட்டருக்கு ₹ 60 ஆக இருந்து, ஜூலை 2021 இல் ₹ 97.3 ஆக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்ததற்கு மத்திய அரசின் கலால் வரி அதிகரிப்பு முக்கிய காரணம். 2018 அக்டோபரில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி முறையே லிட்டருக்கு ₹16.98 மற்றும் ₹ 12.83 ஆக இருந்து, தற்போது முறையே லிட்டருக்கு ₹ 32.90 மற்றும் ₹ 31.80 ஆக உயர்ந்துள்ளது.
இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் பெருநிறுவன வரி வசூலில் நிகழ்ந்த மிகப்பெரிய வீழ்ச்சி. பெருநிறுவன வரி வசூலானாது 2018-19-ல் 6.64 லட்சம் கோடியாக இருந்து, 2019-20 இல் 5.57 லட்சம் கோடியாகவும், 2020-21 ஆம் நிதியாண்டில் ₹ 4.57 லட்சம் கோடியாகவும் குறைந்திருக்கிறது. கார்ப்பரேட் வரி வருமான விகிதத்தைக் குறைத்து அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பெரும் கொடையளித்துள்ளது. அரசு தனது வருவாய் இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக கலால் வரி விதித்து, சாமான்ய மக்களின் மீது அந்த சுமையை ஏற்றியது.
இதன் தொடர்ச்சியான இரண்டாம் நிலை விளைவுதான் பயணிகள் கார் விற்பனை மற்றும் இரு சக்கர வாகன விற்பனை எதிர்மறையாக வீழ்ச்சியடைந்தது. விற்பனையில் நிகழ்ந்த அந்த வீழ்ச்சி ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம்பிக்கையின்மை
வாகன விற்பனை வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணம், தனிநபர்களுக்கு ஒரு வாகனக் கடனை வாங்கும் அளவுக்குத் தங்கள் பொருளாதார எதிர்காலத்தின் மீது நம்பிக்கையில்லாமல் இருப்பது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் கூறியதாவது: “சாதாரண மக்களுக்கு மலிவு விலையில் விமானப் பயண வசதியை வழங்க விரும்புகிறோம்”. மேலும், “ஹவாய் சப்பல்” (ரப்பர் செருப்புகள்) அணிந்தவர்கள் கூட விமானத்தில் பயணம் செய்யும் வகையில் இந்த வசதி இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் கூறியதாக தெரிவித்தார்.
ஆனால் “ஹவாய் சப்பல்” அணிந்தவர்கள் நகரங்களுக்கு இடையே பறப்பதற்கு முன்பாக, அவர்கள் தங்கள் மொபெட்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், அல்லது சிறிய கார்களில் தங்கள் நகரங்களில் பயணிக்க முடியுமென்றால் அது நன்றாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக அந்த விகிதம் குறைந்து வருகிறது. குறைந்தபட்சம் இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைப்பது சரியான திசையில் செல்வதற்கான முதல் படியாக இருக்கும்.
யாரோ செய்யும் தவறுகளுக்கு, வேறு யாரோ தண்டம் செலுத்த வேண்டியுள்ளது. வேதனையான விஷயம், தண்டம் செலுத்துகிறோம் என்று அறியாமலேயே இது நிகழ்கிறது.
Credits : Vivek Kaul / Indian Express