வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இந்திய தொழில்நுட்பத்திலிருந்து பணம் சம்பாதிக்க முடியுமா?
பொருளாதாரத்தில், எண்களை அடிப்படையாகக் கொண்ட மனிதர்கள், கதைகளை அடிப்படையாகக் கொண்ட மனிதர்கள் என்று இரண்டு தரப்பு உண்டு. பல்வேறு கணக்குகளின் மூலம், சூத்திரங்களின் மூலம் சந்தைகளை மதிப்பிடும் மனிதர்கள், முதல் வகை. அவர்கள் புள்ளிவிவரங்களோடு பொருந்தும் பங்குகளை மட்டுமே வாங்குகிறார்கள். நிறுவனங்களுக்கு மூலதனம் வழங்கும் (Venture Capitalists) மனிதர்கள் முந்தைய வரலாற்றைப் பின்தொடரும் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்கள் பெரிய திறனைக் கொண்டிருக்கலாம். துவக்க நிலை தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அவர்கள் நிதி அளிக்க முடியும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இளம், தொழில் நுட்ப அறிவு கொண்ட மக்கள் தொகை கொண்ட இந்தியாவைப் போன்ற நாடுகள் ஏதுமில்லை. இந்தியாவைப் போல கவர்ச்சிகரமான மூலதன வழங்குநர்கள் (Venture Capitalists) எங்குமில்லை. வெளிநாட்டு முதலீடுகளின் மடை திறந்த வெள்ளம் இந்தியாவின் துவக்க நிலை (Start Up) நிறுவனங்களை நோக்கி வெகுவாக வருகின்றனர்.
இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், 3.6 பில்லியன் டாலர்களை சந்தையில் திரட்டியுள்ளது. இந்த ஆண்டு பொதுப் பட்டியல் (public listings) ஒரு அலை போலப் பரவிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் புதிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் அதீத மதிப்பிடப்பட்ட பங்குச் சந்தையைப் பயன்படுத்தி மூலதனத்தை திரட்டவும், தங்கள் மூலதன வழங்குநர்களிடம் இருந்து வெளியேறவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றனர். உணவு விநியோக நிறுவனமான சொமாட்டோவின் சமீபத்திய ஆரம்ப பொது நிதித் திரட்டு (IPO-Initial Public Offering) மிகப்பெரிய அளவில் சந்தா செலுத்தப்பட்டு சந்தையில் கவர்ச்சிகரமாகப் பேசப்பட்டது. பே டி எம் (PayTM), மிகவும் பிரபலமான பணம் செலுத்தும் பயன்பாடானது (payments app), இதுவும் விரைவில் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
இந்தியாவில் வளர்ந்து வரும் இந்த ஆர்வம் சீனாவின் குறைந்து வரும் சந்தை ஆர்வத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். அதன் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒழுங்குமுறைப் பின்னடைவை எதிர்கொள்கின்றன. சீன அரசு தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்ட நிறுவனங்களின் மீது கிடுக்கிப் பிடி போடுகிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, இந்தியா ஒரு இளைய, சுதந்திரமான சீனாவைப் போலத் தோற்றமளிக்கலாம். கூர்ந்து பாருங்கள், அதன் உள்ளடக்கம் முற்றிலும் வேறானது. இந்திய தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதில் இருந்து தொடங்குங்கள். சிறந்த தொழில்நுட்ப தொடக்க முதலீட்டாளர்கள் முக்கியமான இரண்டு காரணிகளை அடையாளம் காண முடியும். ஒன்று தொழில் முனைவோர் (entrepreneurship). இந்தியா ஒரு வாழ்வதற்கு மிகக் கடினமான இடம். ஒரு சிறிய கடைக்காரர் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவரை விட அதிகமாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தியாவின் கடுமையான வணிகச் சூழல் இதனால் ஒரு குறிப்பிட்ட வணிகத் திறமையை வளர்க்கிறது. துவக்க நிலை நிறுவனங்களை அதுதான் உருவாக்குகிறது. மற்றொரு காரணி பொறியியல் (engineering) திறன் ஆகும். “இந்தியாவின் கம்ப்யூட்டிங் திறமை என்பது காப்புரிமை (patent) அளவிலான தொழில்நுட்பத்தை விட மேலான வடிவமைப்பில் உள்ளது” என்று பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப முதலீட்டாளர் ஒருவர் கூறுகிறார். ஆனால் அது ஒரு தனித்துவமான நிலையில் உள்ளது. இத்தகைய சூழல்களோடு மூலதன வழங்குநர் கிடைக்கிற போது துவக்க நிலை நிறுவனங்களின் வளர்ச்சி என்பது இந்தியாவைத் தாண்டி உலகெங்கும் கிளை பரப்ப வாய்ப்பாக இருக்கக் கூடும். நடைமுறையில், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த இரண்டு வகையைச் சார்ந்தே செயல்படுகிறது, முதலாவது வழக்கமான இலக்குகளைக் கொண்ட பணக்கார உலகின் பிரதிபலிப்பு. அப்படியான இரண்டு இந்திய நிறுவனங்கள் தான் இன்போசிஸ் மற்றும் டாட்டா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS). டாட்டா குழுமங்களின் ஒரு கிளையாகவும், குடும்ப நிறுவனமாகவும் இயங்கும் டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் இதில் ஒரு முக்கிய அங்கம். இந்த நிறுவனங்கள் முற்றிலும் தொழில் நுட்பம் சார்ந்தவை அல்ல. இவை தொழில் நுட்பம் சார்ந்த சம்பள விகிதங்களை (tech-enabled wage arbitrage) வழங்கும் நிறுவனங்கள் என்று நீங்கள் கருதலாம். இரண்டாம் வகை நிறுவனங்கள் நகலெடுக்கப்பட்ட (copycat/xerox) நிறுவனங்கள். அதாவது அமெரிக்க மற்றும் சீன தொழில் நுட்ப நிறுவனங்களை அதன் நடைமுறைகளைப் பின்பற்றும் நிறுவனங்கள் அவை. சந்தைகளில் நேரடியாக இறங்கி அவர்கள் மல்லுக்கட்டியாக வேண்டும். உதாரணமாக பிளிப்கார்ட் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு இந்திய அமேசான் என்று வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல ஓலா ஒரு இந்திய ஊபர், பே டி எம் ஒரு இந்திய அலிப்பே (Alipay). இப்போது இத்தகைய நகல் நிறுவனங்களின் காட்டில் தான் மழை. இதுதான் மூலதன வழங்குநர்களாக (Venture Capitalists) புதிய முதலீட்டாளர்கள் இயங்குவதற்கான களம். மகிழ்வோடு இங்கு முதலீடு செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். உலகில் எங்கேனும் இத்தகைய நிறுவனங்கள் பணம் ஈட்டியிருக்குமென்றால், அது இந்தியாவிலும் பணமீட்டிக் கொடுக்கும். இது உண்மையா? பிளிப்கார்ட் நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் அமேசானில் பணிபுரிந்த இரண்டு மென்பொருள் பொறியாளர்களால் (software engineers) நிறுவப்பட்டது. இ-காமர்ஸ் சந்தை அப்போது மிகப்பெரிய அளவில் பரந்து கிடந்தது. இப்போது அந்த நிலை இல்லை. அமேசான் 2013 இல் இந்திய சந்தையில் நுழைந்தது. இந்தியாவின் பழைய பெரு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் துவக்க நிலை நிறுவனங்களால் கவர்ந்து செல்ல முடியும் என்ற உண்மையை உணர்ந்துள்ளன. இந்தியாவின் பெருவணிகக் குழுக்களில் ஒன்றான ரிலையன்ஸ், தொலைத்தொடர்பு மற்றும் பிராட்பேண்டுகளில் அதிக முதலீடு செய்துள்ளது. மேலும் பல்பொருள் அங்காடிகளின் (supermarkets) ஒரு பெரிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இந்தியாவில் “தற்போதைய அதிகாரம்” என்பது இந்திய வணிகத்தை முன் செலுத்தும் ஒரு மிக முக்கியமான ஆற்றலாக இருக்கிறது. லாபி செய்யக்கூடிய திறனும், சட்டங்களை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதில் இருக்கும் திறனும் தான் இவற்றில் மிக முக்கியமானவை.இது மட்டுமல்ல விஷயம். சீனா அளவுக்கு மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. ஆனால், ஒப்பீட்டளவில் மிக ஏழ்மையானது. ஒரு இந்தியரின் ஆண்டு சராசரி வருமானம் 2,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே, அதாவது ஏறக்குறைய ₹1.5 லட்சம். சீனாவில் இது 10,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய ₹7.5 லட்சம்.)
இந்தியாவின் சராசரி வருமான அளவானது ஒரு பணக்கார உயர் அடுக்கு நோக்கி உயர்ந்து ஏழ்மையின் வளைவை மறைக்கிறது. இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் பெரும்பாலானவர்கள் முறையான வேலையில் இல்லை. சராசரி இந்தியர்களை விட இவர்கள் மிகக் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். ஓரளவு ஈர்க்கக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் எண்கள் இருந்த போதும், சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் பாதையில் இந்தியா இல்லை என்பதே உண்மை. குறிப்பிட்டுச் சொல்லும்படியான சந்தை என்பது இந்தியாவில் மிகக் குறைவு.
இந்தியா மறுக்க முடியாத திறன்களைக் கொண்ட நாடு. மூலதன வழங்குநர்களை ஊக்குவிக்கும் அளவுக்கான கணினி மற்றும் வணிகத் திறன்கள் இங்கே உண்டு. சந்தைகளின் போக்கை மாற்றக்கூடிய துவக்க நிலை நிறுவனங்கள் இங்கே உண்டு. ஆனால், ஆனால் உலகெங்கிலும் மூலதன விநியோக நிறுவனங்களின் மீது பாயும் பணம் உண்மையை உணர்த்துவதாக இல்லை. ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளரைப் போலவே, இது ஏற்கனவே வெற்றி பெற்ற கதைகளை ஆதரிக்க விரும்புகிறது. இந்தியா ஒரு கெளரவமான நம்பகத்தன்மை கொண்ட கதை. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அதிலிருந்து கணிசமான பணம் சம்பாதிக்க முடியும். வருமானம் அத்தனை எளிதாக உயர்ந்து விடாது.
Credits: The Economist