14,000பேருக்கு வேலை ரெடி!!!
முன்னணி எலக்ட்ரானிஸ் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழகத்தில் ₹15,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பொறியியல் துறை வேலைவாய்ப்புகள் உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான தமிழக அரசின் உறுதிப்பாட்டை ராஜா சிலாகித்துள்ளார். ஃபாக்ஸ்கான் ₹15,000 கோடி முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இது தமிழ்நாட்டில் பொறியாளர்களுக்கு 14,000 உயர் மதிப்புள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
”ஃபாக்ஸ்கான் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒருங்கிணைப்பு மற்றும் AI உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்ப செயல்பாடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும்” என்று அமைச்சர் ராஜா கூறினார். பொறியியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்றும், இதற்கு பொறியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான @Guidance_TN, இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்காக தனிப் பிரிவை கொண்ட முதல் நிறுவனமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். வேலை வாய்ப்புகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த பிரிவு வழிகாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 100 இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU), ஜப்பானின் நிசான் நிறுவனத்துடன் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று ராஜா கையெழுத்திட்டுள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.
“ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன, இது மாநிலத்தில் பல புதிய தொழில்களை நிறுவ வழி வகுக்கும்,” என்று ராஜா கூறினார்.
செப்டம்பர் 24 அன்று, ரிலையன்ஸ் கன்ஸியூமர் பிராடக்ட்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள SIPCOT அல்லிகுளம் தொழில்துறை பூங்காவில், ஒருங்கிணைந்த உற்பத்தி மையம் ஒன்றை அமைக்க ₹1,156 கோடி முதலீட்டை அறிவித்திருந்தது. 60 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த மையம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று ராஜா கூறியுள்ளார்.
