சிரிஞ்ச் தேவையை அதிகரித்த கோவிட் தடுப்பூசி!
தடுப்பூசி உற்பத்தி அதிகரித்து வருவதால், சிரிஞ்ச்களுக்கான தேவையும் உயர்ந்துள்ளது. முன்னணி சிரிஞ்ச் தயாரிப்பாளரான ‘ஹிந்துஸ்தான் சிரிஞ்சஸ் & மெடிக்கல் டிவைஸஸ்’ (HMD) சிரிஞ்சின் தேவை விரைவில் விநியோகத்தை விட அதிகமாக இருக்கலாம் என்று என்னுவதாக அறிவித்துள்ளது.
உதாரணமாக, ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ இப்போது ஒரு மாதத்தில் 15 கோடி டோஸ் ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனேகா-உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது. இதனை ஒப்பிடுகையில், மறுபயன்பாடற்ற AD (ஆட்டோ டிஸ்போஸபிள்) சிரிஞ்சுகளை மாதந்தோறும் 5 கோடி எண்ணிக்கையில் தயாரிக்கிறது HMD.
AD வகை சிரிஞ்சுகள் மறுமுறை பயன்படுத்துவதை தவிர்க்கும் முறையில் வடிவமைக்கப்பட்ட தொற்றற்ற தயாரிப்புகளாகும், மேலும் அவை முதன்மையாக அரசாங்கங்கள் மற்றும் உலகளாவிய இலாப நோக்கற்ற அமைப்புகளால், தடுப்பூசி இயக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
HMD யின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் நாத் கூறுகையில், HMD அதன் AD சிரிஞ்சு உற்பத்தித்திறனை 2020ஆம் ஆண்டில் 50 கோடியிலிருந்து தற்போது 100 கோடியாக இரட்டிப்பாக்கியுள்ளதாகவும் மார்ச் 2022 வாக்கில் உற்பத்தித்திறன் 120 கோடியை தொட்டுவிடும் என்றும் தெரிவித்தார். HMD இன் மொத்த உற்பத்தி திறன் 300 கோடி சிரிஞ்சுகள் ஆகும் (அனைத்துவகை சிரிஞ்சுகளும் சேர்த்து).
AD சிரிஞ்சு உற்பத்தித்திறனை மார்ச் 2022 க்குள் 1.2 பில்லியனாக எடுத்துச் செல்ல நாத் திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டுக்குள் 2 பில்லியனில் இருந்து 3.5 பில்லியனாக ஒரு முறை உபயோகிக்கப்படும் சிரிஞ்சு உற்பத்தியை எடுத்துச் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
தடுப்பூசி இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சுமார் 100 கோடி சிரிஞ்சுகளை மத்திய அரசு வாங்க விரும்புவதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், AD சிரிஞ்சுகளின் தேவை விநியோகத்தை விட அதிகமாகும் என்று எதிர்நோக்கும் அரசாங்கம், மறுபயன்பாடு செய்ய கூடாத (டிஸ்போஸபிள்) வகை சிரிஞ்சுகளையும் வாங்குவதற்கான டெண்டர்களை வழங்கியுள்ளது.
நாட்டின் முக்கிய சிரிஞ்ச் தயாரிப்பாளர்களில் ஒருவரான இஸ்கான் சர்ஜிக்கல்ஸின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திர ஜெயின் கூறுகையில்: 0.5மில்லிலிட்டர் சிரிஞ்ச் தவிர, 1 கியூபிக் சென்டிமீட்டர் AD சிரிஞ்சுகளையும் வாங்க அரசாங்கம் இப்போது தயாராக உள்ளது என்று தெரிவித்தார். 1cc சிரிஞ்சுகளை தயாரிக்கும் ஆறு அல்லது ஏழு நிறுவனங்கள் இந்த டெண்டர்களில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தார்.
கோவிட் அல்லாத தடுப்பூசிகளுக்கான சிரிஞ்சுகளின் தேவையும் அதிகரித்துள்ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில், பெருந்தொற்று ஆரம்பித்து, தடுப்பூசி மருந்து வெளிவருவதற்கு முன்பே செய்ய வேண்டிய திட்டமிடல் இல்லாததே இன்று மாற்று வழிகளை தேட செய்கிறது. உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமும், உதவிகளும் வழங்கி சிரிஞ்ச் உற்பத்தியை பெருக்கியிருந்தால் இன்று இந்திய தேவை போக இதர உற்பத்தியை உலக நாடுகளுக்கு முன்னொடியாய் ஏற்றுமதி செய்திருக்கலாம், பொருளாதாரத்திற்கும் சற்று வலு சேர்த்திருக்கலாம்.
பெரும்பாலான சிரிஞ்ச் உற்பத்தி தற்போது இந்தியாவில் உள்ள தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசி ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டவுடன், AD சிரிஞ்ச்களுக்கான உலகளாவிய தேவையும் அதிகரிக்கும் என்கின்றனர் சிரிஞ்ச் தயாரிப்பாளர்கள். சரியான நேரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி குறைபாடும் விநியோக இடர்பாடும் ஏற்பட்டது போலல்லாமல் அரசாங்கம் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா? டிஜிட்டல் இந்தியா வேகம்பெருமா?