அமைப்பு சாராத தொழிலாளர்களின் துயரங்களும், “இ -ஷ்ரம்” போர்ட்டல் அறிமுகமும்
இந்தியாவின் “தி எக்கனாமிக் சர்வே” ஜூலை 19, 2019 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் அமைப்புசாராத தொழிலாளர்கள் 93%, இவர்களின் வேலைவாய்ப்புக்கும், எதிர்காலத்துக்கும் எந்த உத்திரவாதமும் இல்லை.
கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த கூலித்தொழிலாளிகள், பல்வேறு தொழிற்சாலைகளில் அன்றாடக் கூலிக்காக வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சாலையோரங்களில் விற்பனை செய்யும் தொழிலாளர்கள் என பொருளாதாரத்தின் மிகப்பெரிய அங்கமாக இருக்கும் இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்க்காக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான புதிய போர்ட்டல் சேவை ஒன்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“இ-ஷ்ரம்” என்ற பெயரில் நேற்று (ஆகஸ்ட் 26) அறிமுகமாகி இருக்கும் இந்தப் போர்ட்டலில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் குறித்த பணி விவரங்கள், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான சமூக நலத்திட்டங்களும், பல்வேறு கணக்கெடுப்புகள் மற்றும் புள்ளிவிவரங்களும் இடம்பெற்றிருக்கும். தொழிலாளர்கள் தங்களது ஆதார் எண், வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களை இந்த போர்ட்டலில் பதிவுசெய்ய வேண்டும். அப்படி பதிவு செய்த தொழிலாளர்களுக்கு 12 இலக்க தனித்துவ எண் கொண்ட “இ-ஷ்ராம்” அடையாள அட்டை வழங்கப்படும். சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அவர்களை நேரடியாகச் சென்று சேருவதற்கு இந்தத் திட்டம் உதவும் என்று அரசு தெரிவிக்கிறது.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளாக,
• குறைந்தபட்ச ஊதியம் குறித்த விழிப்புணர்வு
• உடல் சார்ந்த சிக்கல்களை வழங்கும் பணிச்சூழல்
• விபத்துகளால் வருமானமிழந்து வாடும் குடும்பங்கள்
• தொழிலாளர் அமைப்புகள் குறித்த விழிப்புணர்வின்மை
• 8 மணி நேரத்திற்கும் அதிகமான வேலை நேரம்
• ஓய்வு கால பாதுகாப்பு
• ஏழ்மையும், கடனும்
• பெருந்தொற்றுக்கால துயரங்கள்
• முறையான காப்பீடு இல்லாமை
போன்ற பல இடர்பாடுகள் மற்றும் அறியாமையும் உள்ளன.
இதைத் தவிர்த்து, ஒரு நல்ல வாய்ப்பாக தொடங்கப்பட்ட இந்த போர்ட்டல் தலைப்பை இந்தியிலும், பிற தகவல்களை ஆங்கிலத்தில் மட்டுமே இல்லாது முக்கிய பிராந்திய மொழிகளிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் ஏழைத் தொழிலாளர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
ஒன்றிய அரசின் “இ-ஷ்ரம்” போர்ட்டல், இதற்கான அடித்தளமாக இருந்து, தேவையான மாற்றங்களையும் செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நம்புவோம், நம்பிக்கை தானே வாழ்க்கை!