ரிலையன்ஸ் “சூப்பர்-ஆப்” சவால்கள் நிறைந்தது – ஜெஃப்ரிஸ்
“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் பல வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளை ஒரு சூப்பர்-ஆப் மூலமாக ஒருங்கிணைக்க நினைக்கிறது, ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல” என்று அமெரிக்க முதலீட்டு வங்கியும், நிதி நிறுவனமுமான ஜெஃப்ரிஸ் கருதுகிறது. இந்த நிறுவனம் நிதி சார்ந்த சேவைகள் தவிர அது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்கிறது, “வீ சேட்” (WeChat) மூலம் வணிகத்தை ஒருங்கிணைப்பதில் சீனா பெரிய வெற்றி அடைந்துள்ளது, “ரிலையன்ஸ் ரீடெய்ல்” அந்த மாதிரியைப் பின்பற்ற முயற்சி செய்கிறது,” என்று ஜெஃப்ரிஸ் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ஒரு சூப்பர்-ஆப் கட்டமைப்பானது பல தளங்களை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் அதே வேளையில், தற்போது நிர்வகித்து வரும் வெவ்வேறு தளத்தில் உள்ள பயனர்களை தக்கவைப்பதும், தங்களது பல்வேரு தளங்களை ஒருங்கியக்கம் செய்வதும், சம போட்டியாளர்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் விற்கும் சிறப்பம்சம் பெற்ற தளங்களையும் எதிர்கொள்வது சவால் நிறைந்ததாக இருக்கும், தவிர, இந்த சூழலில் இதை செயலாக்குவது இக்கட்டானது.” என்று ஜெஃப்ரிஸ் கூறுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சில்லறை விற்பனைப் பிரிவில் பலசரக்கு, ஆடை அலங்கார நவநாகரீக பொருட்கள், ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை அடங்கியுள்ளது. இது இ-பார்மசி போர்ட்டலான “நெட்மெட்ஸ்”, மரச்சாமான்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை விற்கும் இணைய விற்பனை தளமான “அர்பன் லேடர்”, பிரத்யேக உள்ளாடைகளை விற்கும் இ-டெய்லரான “ஜிவாமே” மற்றும் உணவுப்பொருட்களை விநியோகம் செய்யும் இணையதளமான “மில்க் பேஸ்கெட்” ஆகியவற்றை விலைக்கு வாங்கியுள்ளது. தேடுபொறி “ஜஸ்ட் டயல்” மற்றும் ஆன்லைனில் இருந்து ஆஃப்லைனுக்கு ஃபேஷன் பொருட்களை விற்கும் “ஃபைண்ட்” போன்ற நிறுவனங்களிலும் ரிலையன்ஸ் ரீடெயில் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கிறது.
பல்வேறு ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி ஜெப்ரீஸ் இதுகுறித்துக் கூறுகையில், ரிலையன்ஸ் ரீடெய்ல் இந்த சூப்பர்-ஆப் பயன்பாட்டை வாட்ஸ்அப்புடன் ஒருங்கிணைக்க விரும்புகிறது என்கிறார். “ஜியோ பிளாட்ஃபார்மில் பேஸ்புக் முதலீடு செய்த போது, ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை அந்த வணிகக் கூட்டணியோடு இணைந்து செயல்பட முடிவு செய்திருந்தன. பயனாளர்கள் ரிலையன்ஸ் ரீடெய்லில் வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது, இது சில காரணங்களால் தாமதமடைந்திருக்கிறது.”
ஜெஃப்ரிஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, எந்தெந்த வணிகத்தின் செயலிகள் ரிலையன்ஸ் சூப்பர் ஆப் வணிகச் சூழலில் இயங்கும் என்ற தெளிவான விவரங்கள் இல்லை, சூப்பர்-ஆப் வெளியீட்டிற்கு முன்பாக அரசின் புதிய இ-காமர்ஸ் விதிமுறைகள் குறித்த தெளிவுக்காகக் காத்திருக்கிறது ரிலையன்ஸ்.
சவால்கள் நிறைந்த சந்தையில் டாடாவின் சூப்பர்-ஆப் மற்றும் ரிலையன்ஸின் சூப்பர்-ஆப் எது இலக்கை அடையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.