ரயில்வே தடங்களில் ‘சோலார்’ பயன்பாடு ! ஆண்டுக்கு 7 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைத் தடுக்கும் ! – ஆய்வு
இந்திய அரசு சாரா நிறுவனமான ‘க்ளைமேட் டிரெண்ட்ஸ்’ மற்றும் இங்கிலாந்தை மையமாகக் கொண்ட பசுமை தொழில்நுட்ப துவக்க நிறுவனமான ‘ரைடிங் சன்பீம்ஸ்’ இணைந்து ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டன. இந்த ஆய்வின்படி, இந்திய ரயில்வே பாதைகளில் சூரிய ஒளி ஆற்றலை நேரடியாகப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 7 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைத் தடுக்க முடியும் என்றும், அதே வேளையில், போட்டி அடிப்படையில் தேசிய நெட்வொர்க்கில் இயங்கும் நான்கு ரயில்களில் ஒரு ரயிலின் உமிழ்வையாவது தடுக்கும் என்றும் கண்டறிந்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் 51,000 ஹெக்டேர் ஆதாயமற்ற நிலப்பரப்பை சூரிய ஆற்றல் மேம்பாட்டிற்காக ஒதுக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்களை இயக்குவதற்கான எரிசக்தித் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நேரத்தில், அந்தத் தேவைக்கு இணையாக 20 ஜிகாவாட் சூரிய மின் ஆற்றல் உற்பத்தியை வழங்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சூரிய ஆற்றல் திறனில் கால் பகுதி (5,272 மெகாவாட் வரை) மின் விநியோகஸ்தர்களிடம் இருந்து வாங்குவதற்கு பதிலாக ரயில்வேயின் மேனிலை மின்தொடர் கம்பி பாதையில் நேரடியாக செலுத்தப்படலாம். இதன் மூலம் எரிசக்தி இழப்புகளைக் குறைத்து ரயில் ஆப்பரேட்டர்கள் பணத்தை சேமிக்க முடியும் என்று அந்தப் பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிலக்கரி ஆதிக்க கட்டமைப்பில் இருந்து விநியோகிக்கப்படும் எரிசக்திக்கு பதிலாக, சூரிய ஒளி சக்தியை பயன்படுத்துவது, ஆண்டுக்கு 6.8 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைத் தடுக்கும் என்றும், இது கான்பூர் நகரத்தின் ஒரு ஆண்டு கார்பன் உமிழ்வைத் தடுப்பதற்கு இணையானது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.