ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..
நிதி நுட்ப நிறுவனங்கள் வாயிலாக தங்க நகை கடன் வழங்கும் வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. குறிப்பாக மதிப்பீட்டு பணிகளை நிதி நுட்ப நிறுவனங்கள் வாயிலாக செய்வதை கண்டித்துள்ளது. தேவையான சரிபார்ப்பு நடவடிக்கைகளை உடனே செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி காட்டமாக கூறியுள்ளது. ரூபீக், இந்தியா கோல்ட் மற்றும் ஓரோ மனி ஆகிய நிறுவனங்கள் வங்கிகளின் உதவியுடன் தங்க நகைக்கடன்கள் வழங்கும் முக்கிய நிறுவனங்களாக உள்ளன.
இவ்வாறு செய்யும்பட்சத்தில் தற்காலிகமாக வங்கி சேவையை முடக்கவும் முடியும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அண்மையில் ஐஐஎஃப்எல் நிறுவனத்தில் தங்க நகைக்கடனில் மோசடி நடந்ததாக புகார் எழுந்த நிலையில் பிரச்சனையை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணித்து வருகிறது. தங்க நகைக்கடன் வழங்கும்போது சொத்து மதிப்பில் 75 விழுக்காடு வரை மட்டுமே கடன் தர வேண்டும் என்ற விதி உள்ளது. நிதிநுட்ப நிறுவனங்கள் வாயிலாக தங்க நகைக்கடன் வழங்கும்போது,முதல் கட்ட பரிசோதனையை அந்நிறுவனம் செய்யும், அடுத்தகட்டமாக வங்கி கிளை சரிபார்க்கும். இந்த இரு தணிக்கைக்கும் இடையே நிறைய முரண்பாடு இருப்பதாக ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவிலேயே பெரிய தங்க நகைக்கடன் வழங்கும் தளமாக ருபீக் என்ற நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு கடந்த டிசம்பர் வரை 1659 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனம்தான் பெடரல் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் சவுத் இந்தியன் வங்கிக்கு நகைக்கடன்களுக்கு உதவி வருகிறது. இதுவரை வங்கிகள்தான் நகைக்கடன்கள் வழங்கி வந்த நிலையில் நிதிநுட்ப நிறுவனங்கள் களமிறங்கியதால் ரிசர்வ்வங்கி சாட்டையை சுழற்றியுள்ளது. பெடரல் வங்கி கடந்த மார்ச்சில் மட்டும் 25,085 கோடி ரூபாய் நகைக்கடன் வழங்கியுள்ளது. ஆக்சிஸ் வங்கியும் தங்க நகைக்கடன்களை வாரி வழங்கியுள்ளது. 24 நிதியாண்டின் இரண்டாவது பாதியில் தங்க நகைக்கடன் விநியோகம் 94 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் தங்க நகைக்கடன் என்ற வகையில் 1 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் அளித்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில் தங்க நகைக்கடன் 89,832 கோடி ரூபாயாக இருந்தது.