அரசு முடக்கத்தால் தங்கம் விலை ஏற்றம்?
அமெரிக்க அரசாங்க முடக்கம் குறித்த கவலைகளால் சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது பற்றி வெளியாகியுள்ள தரவுகள், பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01:51 நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3% உயர்ந்து $3,843.43 ஆக, முந்தைய சரிவுகளில் இருந்து மீண்டது. ஆசிய வர்த்தகத்தின் போது விலைகள் $3,871.45ஆக புதிய உச்சத்தை எட்டின.
டிசம்பர் மாத டெலிவரிக்கான அமெரிக்க தங்க எதிர்காலம் 0.5% அதிகரித்து $3,873.20 ஆக இருந்தது.
“தங்கம் விலை மீண்டும் உறுதியடைந்துள்ளது. அடுத்த ஒரு மாத காலத்தில் மற்றொரு வட்டி விகிதக் குறைப்புக்கு வகை செய்துள்ள அமெரிக்க வேலை வாய்ப்புகள் பற்றிய JOLT தரவுகள் வெளியான பின், முந்தைய இழப்புகளை சரி செய்து வருகிறது” என்று தங்க வர்த்தகரான தாய் வோங் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கம் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்து, ’தங்கத்தை வாங்கு’ என ஊக்கப்படுத்துவதாக கூறினார்.
ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க வேலைவாய்ப்புகள் ஓரளவு அதிகரித்தன, அதே நேரத்தில் பணியமர்த்தல் குறைந்துள்ளது, CME குழுமத்தின் ஃபெட்வாட்ச் கருவியின்படி, பெடரல் ரிசர்வ், அக்டோபரில் வட்டி விகிதக் குறைப்பு செய்ய 97% வாய்ப்புள்ளதாக தங்க வர்த்தகர்கள் கருதுகின்றனர். நிச்சயமற்ற தன்மை மற்றும் குறைந்த வட்டி விகித சூழல்களின் போது தங்கம் விலை உயரும்.
செப்டம்பரில் இதுவரை 11.5% உயர்ந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2011 க்குப் பிறகு அதன் மிகப்பெரிய மாதாந்திர விலை உயர்வை நெருங்கியுள்ளது. இது நடப்பு காலாண்டில் 16.4% அதிகரித்துள்ளது.
