51%உயர்ந்த தங்கம் விலை..
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் ஏற்றம் மட்டுப்படுவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. 2025 ஆம் ஆண்டில் இதுவரை தங்கம் விலை 51% அதிகரித்துள்ளது.
பல்வேறு நாடுகளின் ரிசர்வ் வங்கிகளின் தங்க கொள்முதல், தங்கத்தை அடிப்படையாக கொண்ட நிதிகளின் (ETF) கொள்முதல் அதிகரிப்பு, டாலர் மதிப்பு சரிவு மற்றும் புவிசார் அரசியல் சூழல்களின் ஊடாக சில்லறை முதலீட்டாளர்களின் கொள்முதல் அதிகரிப்பு ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாகும்.
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுவதால், உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $ 4,900 ஆக உயரும் என்று கணித்துள்ளது. இது தற்போதைய நிலைகளிலிருந்து 23%க்கும் அதிகமாகும்.
செவ்வாயன்று, சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் அவுன்ஸுக்கு $3,977.19 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
ரிசர்வ் வங்கி கொள்முதல் 2025 ஆம் ஆண்டில் சராசரியாக 80 மெட்ரிக் டன்களாகவும், 2026 ஆம் ஆண்டில் 70 டன்களாகவும் இருக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது.
சீனாவின் ரிசர்வ் வங்கி தொடர்ந்து பதினொன்றாவது மாதமாக செப்டம்பர் மாதத்தில் தங்கக் கொள்முதலை தொடர்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வங்களுக்கு இடையே ஆன கடன்களுக்கான வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் (1%) வரை குறைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்குலக நாடுகளின் ETF பங்குகள் விலை உயரும் என்று கோல்ட்மேன் சாக்ஸின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
CME Fed Watch கருவியின்படி, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை மேலும் 0.25% குறைக்க முறையே 93% மற்றும் 82% வாய்ப்புள்ளதாக கூறுகிறது.
வட்டி விகிதம் குறையும் போதும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் போது தங்கம் விலை அதிகரிக்கும்.
