3 மாடல்களை அறிமுகப்படுத்தும் நிசான்..!!
நிசான் மோட்டார் நிறுவனம் அடுத்த 14-16 மாதங்களில் மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் தனது இருப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதன் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனம், தனது சில்லறை விற்பனை வலையமைப்பை ஆக்ரோஷமாக விரிவுபடுத்த போவதாக அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அதன் விற்பனை மற்றும் சேவை மையங்களின் எண்ணிக்கையை தற்போதைய 155-லிருந்து 250 ஆக உயர்த்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது, நிசான் இந்தியாவில் மேக்னைட் என்ற காம்பாக்ட் எஸ்யூவி மாடலை மட்டுமே விற்பனை செய்கிறது. மேலும், உள்நாட்டு பயணிகள் வாகன சந்தையில் அதன் பங்கு 1%-க்கும் குறைவாகவே உள்ளது.
அதன் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக, விரைவில் அறிமுகமாக உள்ள அதன் ஏழு இருக்கைகள் கொண்ட மல்டி-பர்ப்பஸ் வாகனத்திற்கு (MPV) ‘கிராவைட்’ (Gravite) என்று பெயரிட்டுள்ளது.
இந்த புதிய மாடல், இந்தியாவுக்காக திட்டமிடப்பட்ட மூன்று அறிமுகங்களில் முதலாவதாக இருக்கும். இது 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டின் மத்தியில் டெக்டன் (Tekton) என்ற நடுத்தர எஸ்யூவி-யும், 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு புதிய ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்யூவி-யும் அறிமுகப்படுத்தப்படும்.
“உலகளாவிய பார்வையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதும், அதே சமயம் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் உள்ள இந்த புதிய அறிமுகங்கள் தொடர்ந்து மாறி வரும் இந்திய சந்தையின் மீதான எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்று நிசான் AMIEO (ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, இந்தியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா) பிரிவின் தலைவர் மாசிமிலியானோ மெசினா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். “இந்தியாவுக்காகவும், இந்தியாவிலும் உருவாக்கப்பட்ட புதிய மாடல்கள் மற்றும் இந்தியாவில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதிகள் ஆகியவை நிசான் கூட்டமைப்புக்கு இந்தியா ஒரு உந்துசக்தியாகவும், முக்கிய கேந்திரமாகவும் தொடர்கிறது” என்கிறார்.
நிசானின் AMIEO பிராந்தியத்தின் செயல்பாட்டிற்கு இந்தியா ஒரு வலுவான பங்களிப்பாளராகத் தொடர்வதாகவும், அதன் பரந்த உலகளாவிய திட்டங்களில், இந்திய கிளை நிறுவனம் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதாகவும் மெசினா மேலும் கூறினார்.
