இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டது – பியூஷ் கோயல்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டன; அமெரிக்கச் சந்தையில் மற்ற போட்டியாளர்களை விட இந்தியாவுக்குச் சாதகமான போட்டித்தன்மையை அமெரிக்கா வழங்கும் பட்சத்தில் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) முதல் கட்டத்திற்கான கட்டமைப்பை இறுதி செய்துள்ளதாக இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தன. இருப்பினும், அமெரிக்காவில் சுங்கவரி தொடர்பான சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா ஒன்பது சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “அதில் அமெரிக்காவுடனான ஒப்பந்தமும் அடங்கும்; அதுவும் கிட்டத்தட்ட முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது” என்று கூறினார்.
“ஒப்பந்தத்தை விரைவாகச் செயல்படுத்த, எங்கள் போட்டியாளர்களை விடச் சரியான மற்றும் ஒப்பீட்டளவிலான போட்டித்தன்மையை நாங்கள் கண்டறிய வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
விஸ்கான்சின் மாநிலத்தின் மில்வாக்கியில் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறவுள்ள ஜி20 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க பியூஷ் கோயல் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் அவர் இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்; அப்போது இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட சாதகமான அம்சங்களையும் கோயல் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கார்பன் எல்லைச் சரி செய்தல் பொறிமுறை (CBAM) மற்றும் காடழிப்புத் தடுப்பு விதிமுறைகள் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய காலநிலை மற்றும் வர்த்தக விதிமுறைகளுக்கு மத்தியில் இவை பெறப்பட்டுள்ளன.
உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்காகக் கூடுதல் எஃகு ஏற்றுமதி ஒதுக்கீட்டையும், காலநிலை நிதியுதவிக்காக 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான உறுதிமொழியையும் இந்தியா பெற்றுள்ளது என்றும், எதிர்காலத்தில் இது போன்ற கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
