ஐரோப்பாவில் நான்கு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்திய டிவிஎஸ் மோட்டார்
உலகின் மூன்றாவது மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மிலனில் நடைபெற்ற EICMA 2026 கண்காட்சியில், ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, விற்பனைக்குத் தயாரான நான்கு வாகனங்களை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஐரோப்பிய சந்தையில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
வளர்ந்த சந்தைகளில் அதன் தடத்தை விரிவுபடுத்தி வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச வணிகத்தில், ஐரோப்பா மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் சர்வதேச வணிகத்தின் பங்களிப்பை 40 சதவீதமாக உயர்த்துவதே இந்த வியூகத்தின் நோக்கமாகும்.
இது குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச வணிகப் பிரிவுத் தலைவர் பெய்மன் கர்கர் கூறுகையில், “டிவிஎஸ் மோட்டாரைப் பொறுத்தவரை ஐரோப்பா ஒரு முக்கியமான சந்தை; இது எங்கள் சர்வதேச வளர்ச்சித் திட்டங்களின் ஒரு முக்கிய அங்கமாகும். மின்சார வாகனங்கள், செயல்திறன் மிக்க மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிரீமியம் ரக நகர்ப்புற போக்குவரத்து ஆகிய துறைகளில் பெரும் வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம். இச்சந்தைகளில் வெற்றி பெற, வெறும் போட்டித்தன்மை கொண்ட தயாரிப்புகள் மட்டும் போதாது; வாடிக்கையாளர்களின் தேவைகளை ஆழமாகப் புரிந்துகொள்வது, உள்ளூர் அளவில் வலுவான செயல்பாடுகளை மேற்கொள்வது மற்றும் சிறந்த விநியோகம் மற்றும் சேவை வலையமைப்பைக் கொண்டிருப்பது அவசியம்” என்று தெரிவித்தார். EICMA கண்காட்சியில், முதன்முறையாக நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுக்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகனங்களை ஓட்டிப் பார்க்கும் (test-ride) வாய்ப்பும் வழங்கப்பட்டது.
அவர் மேலும் கூறுகையில், “கடந்த ஓராண்டாக, எங்களது விநியோக வலையமைப்பை வலுப்படுத்துவதிலும், டீலர் மற்றும் சேவைத் திறன்களை மேம்படுத்துவதிலும், ஐரோப்பிய பயணத் தேவைகளுக்கு ஏற்ற வாகனங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினோம். ஐரோப்பாவில் தொடர்ந்து எங்களது இருப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், வாடிக்கையாளர்கள் டிவிஎஸ் பிராண்டை எளிதில் அணுகுவதை உறுதி செய்யவும், அவர்களுடனான பிணைப்பை ஆழப்படுத்தவும், தரம், தொழில்நுட்பம் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றை உள்ளடக்கிய தயாரிப்புகளை வழங்கவும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
