ஐடிசியின் சாவ்லான், நிமைல் பிராண்டுகளுக்கான விற்பனை இரு மடங்காக உயர வாய்ப்பு
ஐடிசி கையகப்படுத்திய சாவ்லான் மற்றும் நிமைல் ஆகிய பிராண்டுகளுக்கான நுகர்வோர் செலவினம், எதிர்காலத்தில் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து, ரூ. 2,000 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பு புத்தாக்கம், தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துதல் மற்றும் சந்தையில் ஆழமான ஊடுருவல் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக அமையும்.
தொழிற்துறை நிபுணர்களின் கருத்துப்படி, ஐடிசி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த இரண்டு பிராண்டுகளும் பல மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இவற்றின் மீதான நுகர்வோர் செலவினம் ஒட்டுமொத்தமாக ரூ. 1,000 கோடியைக் கடந்துள்ளதுடன், ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.
இது குறித்து ஐடிசியின் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் வணிகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் சத்பதி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “நாங்கள் இதுவரை கடந்து வந்த பாதையைப் போலவே, இனி வரும் காலமும் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
நிறுவனங்கள் மேற்கொள்ளும் கையகப்படுத்துதல்களை நீண்ட கால அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், தொடர்ச்சியான முதலீடு, புத்தாக்கம் மற்றும் விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் ஒரு பிராண்டை நிறுவனம் எவ்வாறு வளர்த்தெடுக்கிறது என்பதில்தான் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஐடிசி அதன் அறிவியல் ஆராய்ச்சித் திறன், தயாரிப்பு மேம்பாட்டு நிபுணத்துவம், வலுவான விநியோகச் சங்கிலி மற்றும் பரந்த விநியோக வலைப்பின்னல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மாறிவரும் நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப, இந்த இரண்டு பிராண்டுகளையும் தனித்துவமான தயாரிப்புகளாக உருவாக்கியுள்ளது.
வரும் ஆண்டுகளில் முன்னணி FMCG நிறுவனமாக மாற இலக்கு கொண்டுள்ள ஐடிசி, நைமைல் பிராண்டை வெறும் தரை சுத்தம் செய்யும் திரவத்திலிருந்து, சமையலறை மேற்பரப்புகளைச் சுத்தம் செய்யும் ஸ்ப்ரேக்கள் மற்றும் பழங்கள், காய்கறிகளைக் கழுவும் திரவங்கள் போன்ற பிற தொடர்புடைய பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. தற்போது இந்த பிராண்டின் கீழ் ஏழு தயாரிப்புகள் மற்றும் சுமார் 20 வகையான தயாரிப்பு யூனிட்கள் (SKUs) உள்ளன.
“இது தற்போது கிழக்கு இந்தியாவில் விற்பனை அளவில் முன்னணியில் உள்ளது; அதே வேகத்தை நாங்கள் தென்னிந்தியாவிலும் கொண்டு சென்றுள்ளோம். இந்தியக் குடும்பங்கள் இருக்கும் இடமெல்லாம் ‘நைமைல்’ தயாரிப்புகளைக் கொண்டு சேர்ப்பதே எங்கள் எளிமையான இலக்கு” என்று சமீர் சத்பதி தெரிவித்தார்.
