7% பங்குகளை தட்டி தூக்கிய நிறுவனம்…
அமெரிக்க தனியார் முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக், பாலாஜி வேஃபர்ஸில் 7% பங்குகளை ₹2,500 கோடிக்கு (தோராயமாக $28.2 கோடி) வாங்குவதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத்தை தளமாகக் கொண்ட பேக்கேஜ் செய்யப்பட்ட பாரம்பரிய ரக சிற்றுண்டி தயாரிப்பாளரான இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் ₹35,000 கோடி (கிட்டத்தட்ட $400 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சந்து விரானி, GA உடனான பேச்சுவார்த்தைகளை உறுதிப்படுத்தினார், பரிவர்த்தனை இறுதி செய்யப்பட்ட பிறகு முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார். GA குழு தற்போது ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் கூறினார். “இந்த பங்கு விற்பனையை எங்களின் குடும்பத்தில் உள்ள புதிய தலைமுறையினர் வழிநடத்துகின்றனர். அவர்கள் புதிய முதலீடுகளை கொண்டு வந்து நிறுவனத்தை விரிவுபடுத்த விரும்புகின்றனர்” என்றார்.
“நாங்கள் இதற்கும் மேலே எந்த பங்குகளையும் விற்க விரும்பவில்லை, மாறாக ஆரம்ப கட்ட பங்கு வெளியீடு ஒன்றை செயல்படுத்த உள்ளோம்” என்றார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கிட்டத்தட்ட ₹40,000 கோடி மதிப்பீட்டில் சுமார் 10% பங்குகளை விற்பனை செய்வது குறித்து இந்நிறுவனம் பரிசீலித்து வந்தது.
பிராந்திய சிற்றுண்டி நிறுவனமான ஜெனரல் மில்ஸ், பெப்சிகோ மற்றும் ஐடிசி, அத்துடன் PE நிறுவனங்களான கேடாரா, டிபிஜி மற்றும் டெமாசெக் உள்ளிட்ட பல போட்டியாளர்களை இது ஈர்த்தது.
விரானி 1982 ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் உள்ள ஒரு திரையரங்கில் சிற்றுண்டி மற்றும் சாண்ட்விச்களின் சப்ளையராக தனது தொழிலைத் தொடங்கினார். கடந்த நிதியாண்டில், பாலாஜி வேஃபர்ஸின் ஆண்டு விற்பனை ₹6,500 கோடியாகவும், நிகர லாபம் கிட்டத்திட்ட ₹1,000 கோடியாகவும் இருந்தது
இருப்பினும், நிறுவன மதிப்பீடு அதீதமாக கணிக்கப்பட்டதன் காரணமாக முதலீட்டாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. “இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை கேடாரா முன்னணியில் இருந்தது. ஆனால் ஜெனரல் அட்லாண்டிக்கின் கொள்முதல் விலை 7-10% அதிகமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
