மிக மோசமான நிலையில் வெளிநாட்டு முதலீடுகள்???
NSE-இல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (FPI) வைத்திருக்கும் பங்குகளின் விகிதம், செப்டம்பர் 2025 காலாண்டில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 16.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கிய சரிவு தற்போது வரை நீடிப்பதாக NSE-இன் இந்திய உரிமை கண்காணிப்பு பிரிவு தெரிவிக்கிறது.
உலகளாவிய மூலதன ஓட்டங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ய பங்குகளை விற்பதன் காரணமாக மார்ச் 2023 முதல் FPI நிறுவனங்கள் வசம் உள்ள பங்குகளின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2025-26இன் முதல் பாதியில் மட்டும், FPI நிறுவனங்கள் வசம் உள்ள பங்குகளின் விகிதம் 0.63% சரிந்தது. செப்டம்பர் காலாண்டில் $870 கோடி வெளியேற்றம் ஏற்பட்டது.
மதிப்பு அடிப்படையில், FPI வசமுள்ள பங்குகளின் அளவு காலாண்டிற்கு காலாண்டு அடிப்படையில் 5.1 சதவீதம் சரிந்து, ₹75.2 லட்சம் கோடியாக இருந்தது. இருப்பினும் அவை கடந்த 20 ஆண்டுகளாக 17% வருடாந்திர வளர்ச்சியை பெற்றுள்ளன. ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் 16.1 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளன.
நிஃப்டி 50 மற்றும் நிஃப்டி 500 குறியீடுகளில் FPI உரிமை முறையே 43 அடிப்படைப் புள்ளிகள் மற்றும் 46 அடிப்படைப் புள்ளிகள் சரிந்து 24.1 சதவீதம் மற்றும் 18 சதவீதமாக குறைந்தது.
இதற்கு மாறாக, உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகள் (DMFகள்) தொடர்ந்து வளர்ச்சியடைந்தன. இது பங்கு சந்தைகளில் அவர்களின் தொடர்ச்சியான ஒன்பதாவது காலாண்டு உயர்வைக் குறிக்கிறது. Q2 FY26 இல் ₹1.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்த மியூச்சுவல் ஃபண்டுகள், NSE-இல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் தங்களின் உரிமையை 10.9 சதவீதமாக உயர்த்தின.
நிஃப்டி 50 குறியீட்டில் DMFகளின் பங்கு 13.5 சதவீதமாகவும், நிஃப்டி 500 குறியீட்டில் 11.4 சதவீதமாகவும் உயர்ந்தது. காலாண்டில் மாதாந்திர முறையான முதலீட்டுத் திட்ட (SIP) முதலீடுகள் சராசரியாக ₹28,697 கோடியாக இருந்தன. இது தொடர்ச்சியாக 6.8 சதவீதம் மற்றும் ஆண்டுக்கு ஆண்டு 20.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
