22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு..காரணம் இதுதான்..

அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகளால், இந்தியாவின் ஏற்றுமதிகள் அக்டோபரில் 11.8 சதவீதம் (ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில்) குறைந்து 3,438 கோடி டாலராக சரிந்துள்ளது. இதனால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அக்டோபரில் 4,168 கோடி டாலராக இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

இறக்குமதிகள் 16.63 சதவீதம் உயர்ந்து 7,606 கோடி டாலராக உயர்ந்தது. தங்க இறக்குமதி 199.22 சதவீதம் அதிகரித்து 1,472 கோடி டாலராக உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம் என தரவுகள் கூறுகின்றன.

ஆகஸ்ட் மாதத்தில் விதிக்கப்பட்ட 50 சதவீத அமெரிக்க வரிகளின் தாக்கம் தொடங்கியதால், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி தொடர்ந்து இரண்டாவது மாதமாக 8.7 சதவீதம் குறைந்து 2025 அக்டோபரில் 630 கோடி டாலராக இருந்தது.

உலக அளவிலான கொந்தளிப்புக்கு மத்தியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பிற முக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. இந்தியாவின் நான்காவது பெரிய ஏற்றுமதி நாடான சீனா மட்டுமே விதிவிலக்கு. சீனாவிற்கான ஏற்றுமதி 42.35 சதவீதம் அதிகரித்து 162 கோடி டாலராக உள்ளது.

வர்த்தக பற்றாக்குறை 2024 அக்டோபரில் 2,623 கோடி டாலரிலிருந்து, 2025 அக்டோபரில் 4,168 கோடி டாலராக உயர்ந்ததற்கு, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அதிகரித்ததே முக்கிய காரணம் என வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார். வெள்ளி இறக்குமதி 2024 அக்டோபரில் 43 கோடி டாலராக இருந்து, 2025 அக்டோபரில் 272 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் மத்திய அமைச்சரவையால் ஆறு ஆண்டுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ₹25,000 கோடி ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளுடன் இணைந்து, வரும் மாதங்களில் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்று அகர்வால் நம்பிக்கை தெரிவித்தார்.

ஏப்ரல்-அக்டோபர் 2025இல், ஏற்றுமதிகள் 0.63 சதவீதம் அதிகரித்து 25,425 கோடி டாலராகவும், இறக்குமதிகள் 6.37 சதவீதம் அதிகரித்து 45,108 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளன. வர்த்தக பற்றாக்குறை 2024 ஏப்ரல்-அக்டோபர் காலத்தில் 17,140 கோடி டாலராக இருந்த நிலையில், இது 19,682 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *