டாடா அறக்கட்டளையில் நடப்பது என்ன?
டாடா அறக்கட்டளை உறுப்பினரான மெஹ்லி மிஸ்திரியை நீக்க, பெரும்பாலான சக அறங்காவலர்கள் வாக்களித்துள்ள நிலையில், டாடா அறக்கட்டளைகளில் இருந்து தம்மை முறையாக நீக்க நடவடிக்கைகளைத் தொடங்கினால், தனது தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பு கோரி மகாராஷ்டிரா அறக்கட்டளை ஆணையரிடம் ஒரு முன் எச்சரிக்கை மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
வெள்ளியன்று அனைத்து டாடா அறக்கட்டளைகளின் அறங்காவலர்களுக்கும் இந்த முன் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 28 அன்று, டாடா அறக்கட்டளைத் தலைவர் நோயல் டாடா, தொழிலதிபர் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் முன்னாள் அரசு உயரதிகாரி விஜய் சிங் ஆகிய மூன்று டாடா அறங்காவலர்கள், மெஹ்லி மிஸ்திரியின் மறு நியமனத்திற்கு எதிராக வாக்களித்தனர். இது அவர் ஒரு அறங்காவலராக தொடர்வதைத் நடைமுறையில் தடுத்தது. இதைத் தொடர்ந்து, டாடா அறக்கட்டளைகள், அறக்கட்டளை ஆணையருக்கு இது குறித்து தெரிவிக்க வேண்டும்.
இந்த விவாகரம் குறித்து டாடா அறக்கட்டளைகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு பதில் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
டாடா சன்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக, டாடா அறக்கட்டளையின் சார்பில் விஜய் சிங் மீண்டும் நியமிக்கப்படுவதற்கு எதிராக மிஸ்திரி குழுவினர் கடந்த செப்டம்பரில் வாக்களித்த பின், அறங்காவலர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியதாக கூறப்படுகிறது. செப்டம்பரில் நடைபெற்ற அதே டாடா டிரஸ்ட்ஸ் கூட்டத்தில், டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவிற்கு அறக்கட்டளை வேட்பாளராக மிஸ்திரி பரிந்துரைக்கப்படுவதை நோயல் டாடா எதிர்த்தார்.
