EV விலை குறையும் : மத்திய அமைச்சர் கட்கரி
இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) விலைகள் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு இணையாக குறையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
எரிபொருள் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் ரூ.22 லட்சம் கோடி செலவிடப்படுவதாலும், சுற்றுச்சூழல் அபாயத்தாலும், நாட்டின் முன்னேற்றத்திற்காக சுத்தமான எரிசக்தியை ஏற்றுக்கொள்வது மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.
“அடுத்த 4-6 மாதங்களுக்குள், மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும்” என்று 20 ஆவது FICCI உயர்கல்வி உச்சி மாநாடு 2025-ல் அவர் நிகழ்த்திய உரையில் கூறினார்.
“அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை உலகிலேயே முதலிடத்திற்கு கொண்டு வருவதே எங்கள் இலக்கு” என்று கூறினார்.
“நான் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, இந்திய ஆட்டோமொபைல் துறையின் அளவு ரூ.14 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது இதன் அளவு ரூ.22 லட்சம் கோடியாக அதிகரிதுள்ளது” என்று கட்கரி மேலும் கூறினார்.
தற்போது, அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் அளவு ரூ.78 லட்சம் கோடியாகவும், அதைத் தொடர்ந்து சீனாவும் (ரூ.47 லட்சம் கோடி) மற்றும் இந்தியாவும் (ரூ.22 லட்சம் கோடி) உள்ளன.
சோளத்திலிருந்து எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக ரூ.45,000 கோடி வருமான ஈட்டியுள்ளதை கட்கரி சுட்டிக்காட்டினார்
