இந்தியாவுக்கு 3 ஆவது இடம்..!!
அக்டோபர் மாதத்தில் உலக அளவில் தங்க பரிமாற்ற வர்த்தக நிதிகளில் (ETF) செய்யப்பட்ட முதலீடுகளில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறியுள்ளது.
ஜனவரி 1 முதல் அக்டோபர் 31 வரை ETF நிதிகளில் இந்தியர்களின் முதலீடுகள் உலக அளவில் ஐந்தாம் இடத்தில் இருந்தது. அக்டோபர் மாதத்தில் இதில் மூன்றில் ஒரு பங்கு முதலீடுகள் வந்தன. நவம்பர் 7 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் ETF முதலீடுகள் $291 கோடியாக இருந்ததாக தரவுகள் கூறுகின்றன. அக்டோபரில், வரவு $84.98 கோடியாக இருந்தது.
நவம்பர் முதல் வாரத்தில் உலக அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தை விட்டு வெளியேறத் தொடங்கியதாக நவம்பர் 7 ஆம் தேதி நிலவரப்படி கிடைக்கக்கூடிய தரவுகள் காட்டுகின்றன. அமெரிக்காவில் $7.76 கோடி அளவுக்கும், பிற நாடுகளில் $3.83 கோடி அளவுக்கும் தங்கத்தில் இருந்து வெளியேறியது. நவம்பர் முதல் வாரத்திற்கான இந்திய முதலீடுகளின் விவரங்கள் கிடைக்கவில்லை.
அக்டோபர் 17 அன்று தங்கம் விலை ஒரு அவுன்ஸ் $4,381.58 ஆக இதுவரை இல்லாத அளவுக்கு உச்சமடைந்தது. பிறகு படிப்படியாக சரிந்து கடந்த வார இறுதியில் அவுன்ஸ் $4,083.60 ஆக இருந்தது. இந்தியாவில், அக்டோபர் 17 அன்று 10 கிராமுக்கு ₹1,30,874 ஆக உயர்ந்து, தற்போது ₹1,24,794 லட்சமாக சரிந்துள்ளது.
அக்டோபரில், அமெரிக்கா தங்க ETFகளில் அதிகபட்சமாக $633 கோடி முதலீடுகளை பதிவு செய்தது. அதே நேரத்தில் சீன முதலீடுகள் $451 கோடியாக இருந்தன. அதைத் தொடர்ந்து இந்திய முதலீடுகள் உள்ளது. ஜப்பானும் அக்டோபரில் கிட்டத்தட்ட $50 கோடி அளவிலான முதலீடுகளை பதிவு செய்தது.
நவம்பர் 7 ஆம் தேதி நிலவரப்படி, அமெரிக்காவில் தங்க ETF-களில் செய்யப்பட்ட முதலீடுகள், இரண்டாவது அதிக முதலீட்டாளரான சீனாவை விட மூன்று மடங்கு அதிகமாகும். அமெரிக்காவில் $4,254 கோடியாக இருந்த முதலீடுகள், சீனாவில் $1,295 கோடியாக இருந்தது. $394 கோடி முதலீடுகளுடன், சுவிட்சர்லாந்தின் முதலீடுகள் மூன்றாவது இடத்திலும், $302 கோடியுடன் பிரட்டன் நான்காம் இடத்திலும், $302 கோடியுடன் இந்தியா ஐந்தாம் இடத்திலும் உள்ளன
