சிலாகித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்..
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை அற்புதம் என்றும், 10-புள்ளி அளவில் 12 புள்ளிகள் அளிக்கலாம் என்று சிலாகித்துள்ளார்.
அதே வேளையில் இந்த சந்திப்பின் மூலம் அமெரிக்க சீனா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு போர் நிறுத்தம் மட்டுமே என்றும், இரு நாடுகளிடையே உள்ள வர்த்தகப் போருக்கான மூல காரணங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனா அமெரிக்க சோயாபீன் கொள்முதல்களை மீண்டும் தொடங்க உள்ளது. அரிய வகை தனிமங்கள் மீதான ஏற்றுமதி தடைகளை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்கும். பதிலுக்கு அமெரிக்கா, சீனா மீதான இறக்குமதி வரிகளை 10% அளவுக்கு குறைக்கும்.
ஆனால் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா விரும்புவதற்கும், சீனா வழங்க விரும்புவதற்கும் இடையிலான இடைவெளியை அம்பலப்படுத்துகிறது. சீனாவின் தொழில்துறை கொள்கைகள், அதீத உற்பத்தி அளவு மற்றும் ஏற்றுமதிகளின் அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி மாடல் பற்றி கடந்த ஏப்ரலில் டிரம்ப் எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்கப்படவில்லை.
இந்த சந்திப்பு குறித்து சீனர்கள் யதார்த்தமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர் என்றும் இரு நாடுகளின் உறவுகள் முழுமையாக சீரடையும் என்று எதிர்பார்க்கவில்லை என இந்த பேச்சு வார்த்தை குறித்து விளக்கிய அதிகாரி ஒருவர் கூறினார்.
ஃபெண்டானில் சம்பந்தப்பட்ட இரசாயனங்களின் வர்த்தகம் தொடர்பான வரிகளின் விகிதத்தை 20% இலிருந்து 10% ஆக பாதியாகக் குறைப்பதன் மூலம் சீன இறக்குமதிகள் மீதான வரிகள் சுமார் 57% இலிருந்து 47% ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்கர்களின் அதிகப்படியான இறப்புகளுக்கு முக்கிய காரணமான இந்த ரசயானத்தின் கடத்தலை நிறுத்த ஜி ஜின்பிங் வலுவான நடவடிக்கை எடுப்பபார் என நம்புவதால் வரி குறைக்கப்பட்டது, என்று அவர் மேலும் கூறினார்.
