அதானி குழும வழக்கு
அதானி குழுமம் தொடர்பான வழக்குகளில், தொடர்புடைய தரப்பினரின் பரிவர்த்தனை (RPT) விதிமுறைகளை மீறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அதானி குழும நிறுவனங்கள், சில நிறுவனங்களை செபி விடுவித்துள்ள நிலையில், குழுமத்திற்கு எதிரான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சந்தைகளின் ஒழுங்குமுறை அமைப்பான செபி, குறைந்தபட்ச பொது பங்குதாரர் (MPS) விதிமுறைகள், இன்சைடர் டிரேடிங் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த விசாரணைகள் நிறைவடைந்துவிட்டாலும், இது தொடர்பான இறுதி உத்தரவுகள் வர இன்னும் கால தாமதம் ஆகலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழன் அன்று, ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற நிறுவனத்தால் கூறப்பட்ட தொடர்புடைய தரப்பினரின் பரிவர்த்தனை விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை செபி முடித்து வைத்தது. இந்த உத்தரவுகளில், ஹிண்டன்பர்க் நிறுவனம் சுட்டிக்காட்டிய அதிகார்ப் எண்டர்பிரைசஸ், மைல்ஸ்டோன் டிரேட்லிங்க்ஸ், ரெஹ்வார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய நிறுவனங்கள், அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் அல்ல என்று செபி தீர்ப்பளித்தது.
மேலும், மார்ச் 2024-ல் செபி அனுப்பிய விளக்க நோட்டீஸ்களில் கூறப்பட்டபடி, பட்டியலிடல் கடமைகள், வெளிப்படுத்தல் தேவைகள் (LODR), மோசடி, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடை செய்தல் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்றும் செபி முடிவுக்கு வந்தது.
ஆகஸ்ட் 2023-ல் உச்ச நீதிமன்றத்தில் செபி அளித்த அறிக்கையில், அதானி குழுமத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட 24 விசாரணைகளில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தது. மீதமுள்ள இரண்டு வழக்குகளுக்கு வெளிநாட்டு ஒழுங்குமுறை அமைப்புகள், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
• உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவல்படி, அதானி விவகாரத்தில் செபி 24 விசாரணைகளைத் தொடங்கியது.
• குறைந்தபட்ச பொது பங்குதாரர் விதிமுறைகள், கையகப்படுத்தும் விதிமுறைகள், தொடர்புடைய தரப்பினரின் பரிவர்த்தனை, பங்கு விலைகளில் முறைகேடு, இன்சைடர் டிரேடிங் ஆகியவை விசாரிக்கப்பட்டு வருகின்றன.
• குறைந்தபட்ச பொது பங்குதாரர், இன்சைடர் டிரேடிங் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை செபி இன்னும் ஆய்வு செய்து வருகிறது.
• செபியின் இறுதி உத்தரவு வர சில மாதங்கள் ஆகலாம்.
