ஆப்பிள் நிறுவனம் நிம்மதி
உலக தொழில்நுட்ப சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சிப்கள் (chip), செமி கண்டக்டர்களுக்கு (semiconductors) 100 % வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியிருந்தார். ஆனால், இந்த அறிவிப்பிலிருந்து முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விலக்கு அளித்துள்ளார்.
இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
அமெரிக்காவில் உற்பத்தி செய்ய ஒப்புக்கொண்ட அல்லது உற்பத்தியை தொடங்கவிருக்கும் நிறுவனங்களுக்கு இந்த புதிய வரி பொருந்தாது என டிரம்ப் தெரிவித்தார். இந்த அறிவிப்பால், ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு 2% உயர்ந்தது.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் கூடுதலாக $100 பில்லியன் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது. இந்த முதலீட்டின் மூலம், ஐபோன் உற்பத்திக்கு விதிக்கப்படவிருந்த வரியில் இருந்து தப்பிக்க முடியும்.
ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள சிப் தயாரிப்பு நிறுவனங்களான அப்ளைட் மெட்டீரியஸ், டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், குளோபல் ஃபவுன்டரீஸ், பிராட்காம் ஆகியவற்றின் பங்குகளும் 1.3% முதல் 5.5% வரை உயர்ந்தன.
இதேபோல், அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட மற்ற சிப் தயாரிப்பு நிறுவனங்களான அட்வான்ஸ்ட் மைக்ரோ டிவைஸ்-ன் பங்கு 3.1% ஆகவும், Nvidia-ன் பங்கு 1.4% ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த வரி விலக்கு அறிவிப்பால், முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளன.
