சொமேட்டோவின் தாய்நிறுவன காலாண்டு கடும் வீழ்ச்சி..
சொமேட்டோவின் தாய் நிறுவனமான எடர்னலின் நான்காம் காலாண்டு லாபம் 77.7விழுக்காடு விழுந்து 39 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 175 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த காலாண்டில், எடர்னல் நிறுவனத்தின் வருவாய் கடந்தாண்டு 3,562 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 63.7விழுக்காடு உயர்ந்து 5,833 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் எடர்னல் நிறுவனத்தின் மொத்த வருவாய் என்பது 12,114 கோடி ரூபாயில் இருந்து 67 விழுக்காடு உயர்ந்து 20ஆயிரத்து 243 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. உணவு டெலிவரி பிரிவில் மட்டும் 17 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 2ஆயிரத்து 50 கோடி ரூபாயாக இருந்த வருவாய் 17விழுக்காடு வளர்ந்து 2ஆயிரத்து 413 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. துரித வணிகம், அதீத போட்டி காரணமாக கடந்த காலாண்டில் எடர்னல் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. ஆர்டர்கள் எடுக்கும் அளவு 8 ஆயிரத்து 439 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 3 ஆவது காலாண்டில் தொடர்ந்து ஆர்டர் செய்து வந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 4 ஆம் காலாண்டில் 20.9 மில்லியனாக உயர்ந்துள்ளது. எடர்னல் நிறுவனத்தின் துரித வணிக பிரிவான பிளிங்கிட்டின் வருவாய் 1,709 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆர்டர்கள் மட்டும் 7798 கோடி ரூபாயில் இருந்து தற்போது 9421 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எடர்னலில் கோயிங்க் அவுட் பிரிவு வணிகம் 146.2 விழுக்காடு உயர்ந்து 229 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
