4-6% வளரும் FMCG நிறுவனங்கள்
2025-26 ஜூலை-செப்டம்பர் காலாண்டில், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) நிறுவனங்கள், 4% முதல் 6% வரை வருவாய் வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்ட பொருட்களின் கையிருப்பு மொத்தத்தையும், விற்பனை செய்து முடிப்பதில் கவனம் குவித்துள்ளதாக பெரும்பாலான FMCG நிறுவனங்கள் குறிப்பிட்டன.
விற்பனை விலை குறைப்பு மற்றும் விற்பனை பொருட்களின் தொகுப்பை விரிவுபடுத்துதல் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு (Y-o-Y) அடிப்படையிலான ஒருங்கிணைந்த வருவாய் வளர்ச்சி 30% க்கும் அதிகமாக இருக்கும் என்று மேரிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் எண்ணிக்கை அடிப்படையிலான விற்பனை அளவு வளர்ச்சி விகிதம் 7 முதல் 9 சதவீதம் வரை இருப்பதாகவும், எதிர்காலத்தில் இது சற்று குறையும் என்று கூறியுள்ளது.
டாபர் இந்தியா மற்றும் கோத்ரேஜ் கன்சியூமர் பிராடக்டஸ் (GCPL) ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வருவாய் வளர்ச்சி விகிதம் 3 முதல் 6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளன.
வருவாய் வளர்ச்சி விகிதத்தை ஒட்டி, அதன் செயல்பாட்டு லாபமும் உயரும் என்று டாபர் இந்தியா தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கை, லாபத்தில் குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், வட்டிக்கு முந்தைய வருவாய், வரி, தேய்மானம் மற்றும் கடன் தவணை அளவு இந்த காலாண்டில் குறையும் என்றும் கோத்ரேஜ் கன்சியூமர் பிராடக்டஸ் குறிப்பிட்டது.
ஜிஎஸ்டி குறைப்பினால் நுகர்வு பொருட்கள் விலை குறைந்து, வாங்கும் சக்தியை அதிகரித்து, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில் நுகர்வை வலுப்படுத்தும் என்று டாபர் இந்தியா தெரிவித்துள்ளது.
