டி.சி.எஸ், பிரான்ஸின் CEA இடையே கூட்டுறவு ஒப்பந்தம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.), பிரான்ஸின் CEA இடையே கூட்டுறவு ஒப்பந்தம்.
ஐ.டி. சேவைகளில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.), பிரான்சின் பொது ஆராய்ச்சி நிறுவனமான சி.இ.ஏ. உடன் இணைந்து, இயற்பியல் செயற்கை நுண்ணறிவு (Physical AI) தீர்வுகளை உருவாக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவார்ந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து, இயந்திரங்கள் இயற்பியல் உலகை உணர்ந்து, புரிந்துகொண்டு, அதனுடன் தொடர்பு கொள்ள உதவும் தீர்வுகளை உருவாக்கும். இதன் மூலம் தொழிற்சாலை செயல்முறைகளின் டிஜிட்டல் மாற்றம் வேகமடையும்.
இந்தக் கூட்டுறவின் முக்கிய இலக்குகள்
சி.இ.ஏ.-ன் நிபுணத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியுடன் டி.சி.எஸ்.-ன் துறைசார் அறிவு, உலகளாவிய சேவைகளை இணைத்து, இந்த கூட்டாண்மை தொழிற்சாலைகள், தளவாடங்கள், ஆட்டோமேஷன் துறைகளுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளை வழங்கும்.
இதன் மூலம் பல்வேறு துறைகளில் செயல்திறனையும், நீடித்த நிலைத்தன்மையையும் மாற்றியமைக்க முடியும். எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், உற்பத்திச் சங்கிலியை மேம்படுத்த முடியும். டி.சி.எஸ்., சி.இ.ஏ. ஆகியவை இணைந்து நிறுவனங்களுக்கு இயற்பியல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகள், பயிற்சி, தொழில்நுட்ப ஆதரவு திட்டங்களை வழங்க உத்தேசித்துள்ளன.
ரோபோக்கள், மாறிவரும் சூழலில் கற்றுக்கொண்டு பணிகளைச் செய்யக்கூடிய திறனை வளர்ப்பது இந்த கூட்டுறவின் முக்கிய பகுதியாகும்.
பிரான்சில் டி.சி.எஸ்.-ன் வளர்ச்சி
இந்த ஒப்பந்தம், பிரான்சின் தொழில்நுட்ப மையமாக விளங்கும் Pace Port Paris ஆராய்ச்சி, புத்தாக்க மையத்தைப் பயன்படுத்துகிறது. இந்த மையம், வல்லுநர்கள், ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சியாளர்கள், பெரிய நிறுவனங்களை ஒன்றிணைத்து, அடுத்த தலைமுறை தீர்வுகளை உருவாக்க உதவுகிறது.
1992-ஆம் ஆண்டிலிருந்து பிரான்சில் செயல்பட்டு வரும் டி.சி.எஸ்., அங்குள்ள முன்னணி நிறுவனங்களுக்குத் தனது சேவைகளை வழங்கி வருகிறது. அண்மைக் காலங்களில், டி.சி.எஸ். பிரான்சில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது. மேலும், பாரிஸ்-சுரேனெஸ், லில்லி, பாயிடியர்ஸ், டொலூஸ் ஆகிய இடங்களில் நான்கு சேவை மையங்களையும் தொடங்கியுள்ளது.
இது பிரான்சின் AI பொருளாதாரத்தில் டி.சி.எஸ்.-ன் நீண்டகால அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
