டாடா சன்ஸில் நடப்பது என்ன?
டாடா சன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்கு சந்தைகளில் பட்டியலிடுவதற்கு, ரிசர்வ் வங்கி விதித்திருந்த செப்டம்பர் 30 காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், முந்தைய நிலை தொடர்கிறது.
இதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்தும், முக்கிய முதலீட்டு நிறுவனப் (CIC) பதிவை ரத்து செய்யக் கோரி டாடா சன்ஸ் அளித்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிப்பது பற்றியும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இது பற்றி அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதுவரை, இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாடு குறித்து ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தவில்லை. கடந்த ஜனவரியில், டாடா சன்ஸின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து வருவதாக ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. அதன் பிற்கு இன்று வரை அமைதி காக்கிறது.
டாடா சன்ஸ் விண்ணப்பம் பற்றி ரிசர்வ் வங்கி சாதகமாக முடிவு செய்ய வாய்ப்புள்ளதாக பிஸினஸ் லைன் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் எஸ்பி குழுமம், அதில் இருந்து வெளியேறும் வகையில், டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் எஸ்பி குழுமத்திற்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்காக ரிசர்வ் வங்கி காத்திருப்பதாக கூறப்படுகிறது.
