கடுமை காட்டும் ஐடி நிறுவனங்கள்
கொரோனா பெருந்தொற்றால் வீட்டிலேயே இருந்து பழகிய ஐடி ஊழியர்களுக்கு இது சற்று கசப்பான தகவல்தான்.., பெருந்தொற்று நேரத்தில் வகைதொகை இல்லாமல் ஆட்களை எடுத்துவிட்டோம் என பெரிய நிறுவனங்கள் வருத்தப்படுவதாக ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை, சலுகைகள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன. பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழல் மாறிப்போய் தற்போது கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போல அலுவலகம் வர ஆரம்பித்துள்ளனர். இதனால் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளித்து வந்த சலுகைகளில் கத்திரிக்கோல் போட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் முதலாமாண்டு ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதால் பெரிய அளவு சிக்கனப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. டிசிஎஸ்ஸை பார்த்து மற்ற பெரிய நிறுவனங்களும் சலுகைகளை நிறுத்தி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் தற்போது நிலவும் பொருளாதார சிக்கல் காரணமாக ஐடி ஊழியர்களுக்கு வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் சூழலும் உள்ளது. இதனால் யாருக்கு எந்த வேலையை தரவேண்டும் என்பதில் நிர்வாகங்கள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெரிய மற்றும் நடுத்தர சம்பளத்தில் உள்ளவர்கள்தான் என்கிறது புள்ளி விவரம். உதாரணமாக ஆண்டுக்கு 8-10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபருக்கு பதிலாக புதிதாக, சம்பளம் குறைவான நபர்களை 2,3 பேராக எடுக்க நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படுகின்றன. இதனால் நடுத்தர பணிக்காலத்தில் உள்ளோர் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதில் தனி கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் நிறுவனங்களில் தகுதியான, திறமையான ஆட்களுக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள். கிடுக்கிப்பிடி போட்டாலும் அதற்கு தகுந்தபடி பணியாற்ற ஊழியர்கள் தயாராக உள்ளனர் என்றும்,மேற்கத்திய ஆட்குறைப்பு அபாயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் 2007-08 அளவுக்கு இருக்காது என்கிறார்கள் மற்றொரு தரப்பினர். எனினும் இந்திய ஐடி நிறுவனங்கள் நிர்வாக செலவு அதிகரிப்பதால் தங்கள் பணியாளர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது உண்மைதான் என்றும் அதனை மறுப்பதற்கு இல்லை என்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்