வாட்ஸ்ஆப்,சிக்னல் செயலிகளுக்கு கட்டுப்பாடு…
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தொலைதொடர்பு சட்டங்களில் மத்திய அரசு விரைவில் மாற்றங்களை கொண்டுவர உள்ளது. இதற்கான பிரத்யேக சட்ட முன்வடிவையும் மத்திய அரசு வடிவமைத்து வருகிறது. அதன்படி வாட்ஸ் ஆப்,சிக்னல் மற்றும் பிற ஓடிடி தளங்களின் தரவுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வர உள்ளன.
குரல்,வீடியோ,இணையதள தகவல் பரிமாற்றத்தையும் இந்த புதிய சட்டம் கண்காணிக்க அதிக வாய்ப்புள்ளது.
தேவை ஏற்பட்டால் பிற செயலிகளையும் இந்த வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த செயலிகளில் இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்தை மத்திய அல்லது மாநில அரசு நியமிக்கும் அதிகாரிகள் தேவை ஏற்பட்டால் கண்காணிக்க முடியும் என்றும், பொது மக்களின் பாதுகாப்பு கருதி இதனை செய்ய உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசத்தின் ஒருமைப்பாடு,நம்பகத்தன்மை,இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன என்றும் தகவல் கசிந்துள்ளது