நீங்கள் சாப்பிடும் பொருள் கொட்டுப்போனதா?
ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் உணவில் 17% குப்பைக்கு செல்கிறது. அதாவது நல்ல பொருட்களும் சில நேரங்களில் குப்பைக்கு செல்வதோடு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் அதிகமாக உள்ளது என்கிறது அந்த அமைப்பு. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் பொருட்கள் வீணாக குப்பைக்கு செல்வதை தடுக்கும் நோக்கில் best before என்ற லேபிளை நீக்க திட்டமிட்டுள்ளனர்.
1970களில் கொண்டு வரப்பட்ட இந்த முறை உலகம் முழுவதும் பிரபலமானதாகும். ஆனால் சில பொருட்கள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் கெடாமல் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். உலகளவில் பலர் பசியால் தவித்து வரும் நிலையில் best before லேபிளை தூக்கி வீசிவிட்டு வேறு சில அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
அமெரிக்காவில் மட்டும் 35% உணவுப் பொருட்கள் சாப்பிட தகுதியான நிலையிலேயே குப்பைக்கு செல்வதாகவும், இதற்கு சரியான வழிகாட்டுதல்கள் தேவை என்றும் துறை சார்ந்த நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிடலாமா வேண்டாமா இல்லை காலாவதியாகிவிட்டதா என்ற குழப்பத்திலேயே தகுதியான உணவு வீணடிக்கப்படும் அளவு மட்டும் 40 லட்சம் டன் என்கிறார்கள் நிபுணர்கள்.
அமெரிக்காவில் சில நிறுவனங்கள் best beforeக்கு பதிலாக use by என்ற பெயரில் தரவுகளை அச்சிடத் தொடங்கியுள்ளனர். உலகளவில் இது குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில் உணவு வீணடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், உணவு,உடல் ஆரோக்கியமும் முக்கியம் என்பது பலரின் கருத்து. உலகம் முழுவதற்கும் ஒரே மாதிரியான கட்டமைப்பு,விதிகள் இருத்தல் வேண்டும் என்கின்றனர் மற்றொரு தரப்பினர்.