இந்தியா-EFTA டீல் தெரியுமா..
இந்தியர்கள் இனி உயர்தர ஸ்விஸ் வாட்ச்கள் ,சாக்லேட்டுகள் கடிகாரங்களை குறைந்த விலையில் வாங்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. EFTA என்ற அமைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பொருட்கள் விலை குறைய இருக்கிறது. EFTA அமைப்பில் ஐஸ்லாந்து, லியெச்டென்ஸ்டெயின், நார்வே மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளுடன் இந்திய வணிகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை செய்துள்ளன.
இந்த ஒப்பந்தம் அமலாக ஒரு ஆண்டு வரை ஆகும் என்று கூறப்படுகிறது. ரோலக்ஸ்,ஒமேகா மற்றும் கார்டியர் ரக வாட்ச்கள் இனி இந்தியாவிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்னணி உணவுத்துறை நிறுவனமான நெஸ்ட்லே,உண்மையில் ஸ்விட்சர்லாந்தை பூர்விகமாக கொண்டது. இந்தியா மேற்கொண்டுள்ள புதிய ஒப்பந்தத்தின்படி, பல ஸ்விட்சர்லாந்து பொருட்களுக்கு வரிச்சலுகைகள் கிடைக்க உள்ளன. கடல் சார்ந்த உணவுகளான டூனா மற்றும் சால்மன் மீன்கள் குறைந்த விலையில் கிடைக்க இருக்கின்றன. ஸ்மார்ட் போன்கள்,சைக்கிள் உதிரி பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், கைக்கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள் மலிவான விலையில் கிடைக்க இருக்கின்றன.
பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் வரி 5%-ல் இருந்து பாதியாக குறைய இருக்கிறது. காகித அளவில் 1 விழுக்காடு வரி தங்கத்தின் மீது குறைக்கப்படும் என்று ஒப்பந்தம் கூறினாலும் இந்தியாவில் தங்கத்துக்கு 15 விழுக்காடு வரி பொருந்தும் என்று கூறப்படுகிறது. ஒயின் பாட்டில்கள் விலை குறைய இருக்கிறது. இந்தியாவுக்கு மிகப்பெரிய வர்த்தக பங்காளராக ஸ்விட்சர்லாந்து திகழ இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் நார்வே இருக்கிறது. உலகளவில் தனித்துவமான கண்டுபிடிப்புகளுக்கு அந்நாடு பெயர் பெற்றதாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஸ்விட்சர்லாந்துககு நகைகள்,படகுகள் செல்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையே நடப்பாண்டில் 17.14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கும் நார்வேவுக்கும் இடையே 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஸ்விட்சர்லாந்தில் இருந்து மட்டும் இந்தியாவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடுகள் கிடைத்து வருகின்றன.