ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் குறையூம்.
இந்தியாவில் விமான போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,இந்தியாவில் பழைய விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு கோடைக்காலம் வரும் 31 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 26 ஆம் தேதி வரை உள்ளது. இந்நிலையில் வாரந்திர சேவையில் 26 விழுக்காடு சேவையை மட்டுமே இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாரத்துக்கு 1657 விமானங்களை மட்டுமே குறிப்பிட்ட காலகட்டத்தில் இயக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக 2240 விமானங்களை இயக்க திட்டமிட்டிருந்தது. 2132 விமானங்களை நடப்பு காலகட்டத்தில் இயக்கவும் விண்ணப்பங்களை செய்தது. ஜூன் 19,2023 முதல் ஜூலை 5 2023 வரை மட்டும் 8 முறை தொழில்நுட்பக் கோளாறை அந்நிறுவனம் சந்தித்த நிலையில் மொத்த எண்ணிக்கையில் 50 விழுக்காடு மட்டும் இயக்கினால் போதும் என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. போதுமான விமானிகள்,விமானங்களின் வாடகை அதிகரிப்பும் இந்த பிரச்னைகளை மேலும் அதிகரிப்பதாக அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
33 விமானங்கள் ,400 விமானிகளை கொண்டு நிறுவனத்தை ஓட்டி வருகிறது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம். கூடுதலாக 60 முதல் 90 விமானிகள் தேவைப்படுவதால் அந்நிறுவனம் தடுமாறி வருகிறது. போயிங் ரக விமானிகளை பிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும் நிலையில் ஆகாசா ஏர் மற்றும் ஏர்இந்தியா நிறுவனங்கள் போயிங் விமானங்களை ஓட்டத் தெரிந்தவர்களை அதிகம் சம்பளம் கொடுத்து எடுத்துவருகின்றனர்.முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெறுவதற்காக 1400 பணியாளர்களையும், 15 விழுக்காடு அளவுக்கு மனிதவளத்தையும் குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. விமான நிறுவனத்தை மேம்படுத்த 2250 கோடி ரூபாயை நிதியாக திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டது. ஏற்கனவே சன்டிவி நிறுவனர் கலாநிதி மாறனுக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெருந்தொகை அளிக்க வேண்டியிருக்கிறது. இப்போது ஸ்பைஸ்ஜெட்டின் சந்தை பங்களிப்பு வெறும் 4 விழுக்காடாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட்டில் அதிகபட்சமாக 118 விமானங்களும்,16 ஆயிரம் பணியாளர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.