கச்சா எண்ணெய் விலை உயர்வு..
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்து கச்சா எண்ணெயின் விலை 1 விழுக்காடு வரை உயர்ந்தது. இதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலும் நிலையற்ற சூழல் காணப்படுவதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை மட்டும் 1.05 அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது. இதனால் அந்த ரக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 86.48 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதேபோல் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 1.15 டாலர் ஒரே நாளில் உயர்ந்து 81.78 டாலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் இதுவரை 11 விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது. பல நாடுகளில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைப்பு, ஒபெக் பிளஸ் நாடுகளின் உற்பத்தி குறைப்பு திட்டம் ஆகியவையும் இந்த விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மற்றும் ஹமாஸ் -இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர்கள்தான் பிரதான காரணிகளாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது டிரோன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் ரஷ்ய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 7 விழுக்காடு வரை பாதிப்பை சந்தித்துள்ளதால் அதன் தாக்கம் விலையேற்றமாக மாறியுள்ளது. இதேபோல் காசாவில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கத்தார்,எகிப்து ஆகிய நாடுகள் தலையிட்டு சமாதானம் பேசியும் போர்நிறுத்தம் அமலான பாடில்லை. கொரோனாவுக்கு பிறகான எண்ணெய் துறை பயன்பாடு அதிகரிப்பும் இந்த விலையேற்றத்துக்கு காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விரைவில் ஒரு பேரல் 90 டாலராக உயரும் அபாயமும் இருப்பதாக எண்ணெய் தரகர் ஒருவர் சுட்டிக்காட்டுகிறார்.