ரத்தன் டாடாவை புகழ்ந்த எலான் மஸ்க்..
பணம் சம்பாதிப்பதை மட்டுமே இலக்காக கொள்ளாமல் சமூகத்தையும் மேம்படுத்த உதவுவதில் ரத்தன் டாடாவுக்கு நிகர் இந்தியாவில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் ரத்தன் டாடாவின் புகழ் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா வரை தெரிந்திருக்கிறது. உலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க், ரத்தன் டாடாவைபற்றி 2009-ல் பேசிய காட்சி தற்போது வேகமாக பரவி வருகிறது. டாடா நேனோ கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது ரத்தன் டாடாவை எலான் மஸ்க் புகழ்ந்து தள்ளியுள்ளார். ரத்தன் டாடா ஒரு ஜென்டில்மேன் என்றும் அவர் ஒரு வழிகாட்டி என்றும் மஸ்க் அப்போதே புகழ்ந்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டே உலகின் மலிவு விலை காரான டாடா நோனோவை ரத்தன் டாடா சந்தைபடுத்தினார். இந்த திட்டம் மிகவும் புரட்சிகரமானது என்று குறிப்பிட்ட எலான் மஸ்க் , அதிகரிக்கும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த திட்டம் எப்படி செயல்படுமோ என்றும் மஸ்க் சந்தேகம் தெரிவித்தார். கார் வாங்கும்போது விலை மிக மலிவாக இருந்தாலும், அது இயங்கும்போது பல ஆண்டுகளில் எரிபொருளுக்கே அதிகம் செலவாகுமே என்றும் அவர் குறிப்பிட்டார். நல்ல நோக்கத்துக்காக டாடா நேனோ கார்கள் சந்தை படுத்தபட்ட போதிலும், அனைவரும் வாங்கும் வகையிலான கார் என்ற கூறப்பட்டுபோதிலும் அதனை பொதுமக்கள் அந்தளவுக்கு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பாதுகாப்பு அம்சங்கள் குறைவு என்று கூறப்பட்டதால் அந்த கார் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போனது. ஆட்டோமொபைல் துறையில் சந்தைபடுத்தப்பட்ட ஒரு பொருள் தோல்வியை சந்தித்த மிக மோசமான வரலாறை டாடா நோனோ கொண்டிருந்தது என்றால் அது மிகையல்ல. 2018ஆம் ஆண்டு நேனோ ரக கார்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.