வாயை பிளக்க வைத்த வடபாவ் வியாபாரியின் சம்பளம்..
இது என்னடா வாழ்க்கை எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவே இல்லை என்று பலர் புலம்புவதை கேட்டிருப்போம், ஆனால் வடபாவ் விற்கும் நபரின் வருவாயை கேட்டால் இன்னும் கூட நம்மை கடுப்பேற்றும் செய்தி இது. மும்பையில் சாலையோர உணவாக வடபாவ் மிகவும் பிரபலமானது. அண்மையில் சர்தக் சச்தேவா என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஒரு வடபாவ் 15 ரூபாய், ஒரு நாளில் அவரால் 622 வடபாவ் விற்பனை செய்ய முடிகிறது. ஒரு மாதத்துக்கு சராசரியாக 2.8லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என்று கூறியுள்ளார். 80 ஆயிரம் ரூபாய் செலவு போக கையில் 2லட்சம் ரூபாய் ஒரு மாதத்துக்கு நிற்கிறது. ஆண்டுக்கு 24லட்சம் ரூபாய். இது இந்தியாவில் சராசரியாக சம்பாதிக்கும் ஒயிட் காலர் வேலைக்கு செல்வோரை விடவும் அதிகமாகும். இந்த இன்புளுயன்சரின் வீடியோவுக்கு சரமாரியான கமன்ட்டுகளும் வருகின்றன. சரியான இடத்தில் கடை அமைந்தால் லாபம்தான் என்றும், அதே நேரம் தாங்களும் சாலையோர உணவுக் கடை தொடங்கலாமா என யோசிப்பதாகவும் கமன்ட் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் சாலையோர துரித உணவுகள் இப்படித்தான் நல்ல வணிகம் செய்து வருவதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.