நகர்புற நடுத்தர வருவாய் உள்ளவர்கள் தவிப்பு..
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நகர்புற பணக்காரர்களின் சொத்துமதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், அதே நேரம் நகரங்களில் வாழும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் அவதியடைவதாகவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இருந்த சூழலுக்கும் தற்போது உள்ள சூழலுக்கும் வித்தியாசம் எப்படி உள்ளது என்று கந்தர்ஸ் இந்தியா அட் கிராஸ் ரோட்ஸ் என்ற ஆய்வு நடத்தப்பட்டது. இதில் நகர்புறங்களில் வசதி படைத்தோரின் வருவாய் 86 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நகர்புறத்து மக்களின் வாழ்வாதாரம் 25 விழுக்காடு வரை சரிந்திருப்பதாகவும் தெரியவந்தது. நகர்புறங்களில் குறைந்த வருவாய் உள்ள மக்கள் தங்கள் தேவைகளையும் வாங்கும் திறனையும் குறைத்துக்கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. மலிவான பொருட்களை எப்எம்சிஜி நிறுவனங்கள் விற்பனை செய்தாலும் அதனை வாங்கும் ஆர்வம் குறைந்திருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் எப்எம்சிஜி நிறுவனங்களின் விற்பனை மோசமானதும் இதற்கு ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம். இந்துஸ்தான் யுனிலிவர், டாடா கன்சியூமர், பிரிட்டானியா ஆகிய நிறுவனங்களும் இதனை ஒப்புக்கொண்டன. கிராமங்களில் இந்தாண்டு வீட்டு உபயோக பொருட்கள் நுகர்வு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் போதுமான அளவுக்கு மழைப்பொழிவு இருந்ததும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 3காலாண்டுகளுக்கு முன்னதாக நகரங்களை விட கிராமங்கள் அதிக வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மிரளவைத்தனர். இது கடந்த 3 ஆண்டுகளில் நடக்காத ஒரு நிகழ்வாகும். நகர்புற தேவை குறைந்திருப்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
