முரளிதரன் நிறுவனத்தின் உரிமை வாங்கிய ரிலையன்ஸ்..
இலங்கை கிரிக்கெட்டின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சன் கிரஷ் நிறுவனத்தின் இந்திய உரிமையை ரிலையன்ஸ் கன்சியூமர் நிறுவனம் வாங்கியுள்ளது. சன் கிரஷ் நிறுவனம் சிலோன் பீவ்ரேஜ் நிறுவனமாக இருந்தது. இதில் ஒரு பகுதியை கடந்தாண்டே ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இந்த நிலையில் சன் கிரஷ் என்ற ஜூஸ் வகையை இந்தியாவில் தயாரித்து விற்பதற்கான உரிமையை ரிலையன்ஸ் வாங்கியுள்ளது. 200 மில்லி ஜூஸ் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரியல்,டிராபிகானா உள்ளிட்ட நிறுவனங்களும் இதே விலையில் விற்பனை செய்யத் தொடங்குவதால் போட்டி அதிகரித்துள்ளது. இந்திய குளிர்பான சந்தை ஓராண்டில் 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள குளிர்பானங்களை தயாரிக்கின்றனர். வரும் 2030 ஆம் ஆண்டு இது 1.47 டிரில்லியன் ரூபாயாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் காம்பா மற்றும் இண்டிபென்டன்ஸ் நிறுவனங்கள் ஸ்னாக்ஸ், சோப்புகள், சரும பாதிப்பை குறைக்கும் பொருட்களையும் விற்று வருகின்றன. கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில், ரிலையன்ஸ் கன்சியூமர் நிறுவனத்தின் வருவாய் 8 ஆயிரம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. லோட்டஸ் சாக்லேட்டுகள், பலிபன் பிஸ்கட், தனிநபருக்கு தேவைப்படும் பொருட்களை விற்றுவருவதாகவும், 25 நிதியாண்டில் மட்டும் 10லட்சம் கடைகளை திறக்கவும் ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 1 கோடியே 20லட்சம் fmcg சில்லறை விற்பனையகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது
