மெஹ்லி மிஸ்திரி கொடுத்த ஷாக்..
டாடா அறக்கட்டளைகளில் இருந்து தான் நீக்கப்பட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப் போவதில்லை என தொழிலதிபர் மெஹ்லி மிஸ்திரி டாடா அறக்கட்டளைக்குத் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா தொண்டு நிறுவனங்கள் ஆணையரிடம் தனது பதவி நீக்கத்தை எதிர்த்து முறையீடு செய்திருந்த நிலையில், அந்த மனுவை வாபஸ் பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
அக்டோபர் 28 அன்று அறங்காவலர் பதவியில் இருந்து மிஸ்திரி நீக்கப்பட்டார். நிறுவனத்தை விட வேறு யாரும் பெரியவர்கள் அல்ல என்று ரத்தன் டாடா கூறியுள்ளதை சுட்டிக் காட்டி மீதமுள்ள ஆறு அறங்காவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ” ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மதிப்பீடுகளை நான் பின் பற்றினேன். டாடா அறக்கட்டளைகள் சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதையும், டாடா அறக்கட்டளைகளின் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும் விஷயங்களை தவிர்க்கவும் இதை உறுதி செய்கிறேன்” என்று மிஸ்திரி தனது கடிதத்தில் எழுதியதாக கூறப்படுகிறது.
டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா மற்றும் அறங்காவலர்கள் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோர் கடந்த வாரம் நிரந்தர அறங்காவலராக மிஸ்திரி நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து வாக்களித்தனர். இதற்கு சற்று முன்பு பிரமித் ஜாவேரி, டேரியஸ் கம்பாட்டா மற்றும் ஜெஹாங்கிர் எச்.சி. ஜெஹாங்கிர் ஆகிய அறங்காவலர்களுடன் மிஸ்திரியும் இணைந்து, டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் இருந்து விஜய் சிங்கை நீக்குவதற்கு வாக்களித்தார். இதைத் தொடர்ந்து இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்தது.
30,000 கோடி டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் டாடா டிரஸ்ட்ஸ் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
