மருந்துத்துறையில் போட்டா போட்டி..!!
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் உடல் பருமன் மருந்து சந்தையில் அடுத்த ஆண்டு மார்ச் மாததத்தில் மலிவான, காப்பி ரைட் இல்லாத, பொது மருந்துகள் சந்தைக்கு வர உள்ளன. அதற்கு முன்பாக தங்கள் முன்னிலையை உறுதிப்படுத்த உலகளாவிய மருந்து நிறுவனங்களான எலி லில்லி மற்றும் நோவோ நோர்டிஸ்க், தீவிரமாக முயன்று வருகின்றன.
நோவோ நிறுவனம், விலை குறைப்புகள் மற்றும் விரைவான அறிமுகங்களை முன்னெடுத்துள்ளது. அதே சமயம் லில்லியின் தயாரிப்புகள் சந்தையில் முன்கூட்டியே அறிமுகப் படுத்தப்பட்டதால் பயனடைந்தன. இரண்டு நிறுவனங்களும் மருத்துவர்களிடம் தீவிரமாக அணுகுவது, உடல் பருமன் குறித்த அதிக விளம்பரங்கள், மருத்துவமனைகளுடன் கூட்டு சேருவது, நோயாளிகளுக்கான சலுகைகள் மற்றும் உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களுடன் விநியோக ஒப்பந்தங்கள் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன.
லில்லி நிறுவனம் இந்தியாவில், உடல் பருமன் குறித்த சமூக ஊடக விளம்பரப் பிரச்சாரத்திற்காக பிரபல பாலிவுட் நடிகர்களுடன் கைகோர்த்துள்ளது.
உடல் பருமன் மருந்துகளுக்கான மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா இருந்தாலும், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பெரும்பாலான நோயாளிகள் தங்கள் சொந்தப் பணத்தில் மருந்துகளுக்குச் செலவிட்டாலும், இந்தியாவில் ஆரம்பகால விற்பனை புள்ளிவிவரங்கள் விரைவான பயன்பாட்டைக் காட்டுகின்றன.
“இந்த சந்தை இரண்டு ஆண்டுகளுக்குள் 100 கோடி டாலருக்கும் அதிகமாக வளரக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று நுவாமா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் அகோல்கர் கூறினார்.
ஃபார்மரக் என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் இந்த சந்தையின் தற்போதைய மதிப்பு ரூ.628 கோடி ரூபாய் (7.023 கோடி டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், இது 2021-ஆம் ஆண்டிலிருந்து ஐந்து மடங்கு வளர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளது.
அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான லில்லியின், நீரிழிவு மற்றும் எடை குறைப்புக்காக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மௌன்ஜாரோ மருந்து, மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே விற்பனை இரட்டிப்பாகி, அக்டோபர் மாதத்தில் மதிப்பு அடிப்படையில் அதிகம் விற்பனையாகும் மருந்தாக மாறியது.
வீகோவி மற்றும் ஓசெம்பிக் ஆகிய மருந்துகளில் உள்ள முக்கிய மூலப்பொருளான செமாக்ளூடைடு மீதான நோவோ நிறுவனத்தின் காப்புரிமை மார்ச் 2026-ல் காலாவதியானதும், டாக்டர் ரெட்டிஸ், சிப்லா, சன் பார்மா, சைடஸ் மற்றும் லூபின் உட்பட 20-க்கும் மேற்பட்ட இந்திய மருந்து நிறுவனங்கள், நோவோவின் இந்த எடை குறைப்பு மருந்தின் மலிவான பிரதிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன..
