விரைவில் வருகிறது Zepto IPO
விரைவு வர்த்தக (qcom) நிறுவனமான ஜெப்டோ, அதன் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (IPO) வரைவு ஆவணங்களை இரகசிய வழிமுறையின் கீழ் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (DRHP) தாக்கல் செய்த பிறகு, அடுத்த நிதியாண்டில் பங்குச் சந்தைகளில் பட்டியலிட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜெப்டோவின் இந்த முன்னெடுப்பு, இந்தியாவின் முதல் பிரத்யேக விரைவு வர்த்தக தளத்தின் பங்குச் சந்தை அறிமுகத்தைக் குறிக்கும். இந்த முன்னேற்றம் குறித்து அந்த விரைவு வர்த்தக நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
தனது ஐபிஓ தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, பெங்களூரைச் சேர்ந்த இந்த நிறுவனம் சமீபத்தில் தன்னை ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றிக்கொண்டது. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, அந்த நிறுவனம் அதன் பெயரை ஜெப்டோ பிரைவேட் லிமிடெட் என்பதிலிருந்து ஜெப்டோ லிமிடெட் என்று மாற்றியுள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்த ஐபிஓ-வின் அளவு சுமார் 50 கோடி டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் வரைவு ப்ராஸ்பெக்டஸை சமர்ப்பிப்பதற்காக, அந்நிறுவனம் ஆக்சிஸ் வங்கி லிமிடெட், மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் லிமிடெட் மற்றும் மார்கன் ஸ்டான்லி, ஹெச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்க் ஆகியவற்றின் இந்தியப் பிரிவுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த வெளியீட்டில் புதிய பங்குகள் வெளியீடு மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களால் இரண்டாம் நிலை பங்கு விற்பனை ஆகியவையும் அடங்கும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. இந்தத் துறையில் போட்டி அதிகரித்து வருவதால், இந்நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் திரட்ட உள்ள நிதியில் பெரும் பகுதியை, அதன் விரைவு வர்த்தக செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
