ஹாப்பி நியூஸ் : 125 % உயர்வு..!!
இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, தங்கத்தின் விலை உயர்வால் அதன் பிணைய மதிப்பு அதிகரித்து, கடன் வாங்குபவர்கள் அதிக கடன் பெற முடிந்ததால், நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, தங்கத்தின் மீதான வங்கிக் கடன்கள் முந்தைய ஆண்டை விட 125% அதிகரித்துள்ளன.
சரக்கு மற்றும் சேவை வரியில் செய்யப்பட்ட குறைப்பைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததால் வாகனக் கடன்கள் 11% உயர்ந்த நிலையில், அக்டோபரில் பண்டிகைக் காலத் தேவை முடிவடைந்ததால், நீண்ட கால பயன்பாடு கொண்ட நுகர்வோர் பொருட்கள் மீதான கடன்கள் குறைந்தன.
கடந்த ஓராண்டில், தங்கக் கடன்கள், மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக மாறி உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இதன் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. நிலுவையில் உள்ள தங்கக் கடன்கள் நவம்பர் 2023-ல் ₹898 கோடியிலிருந்து நவம்பர் 2024-ல் ₹1.59 லட்சம் கோடியாகவும், நவம்பர் 2025 நிலவரப்படி ₹3.5 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளன.
2025-ல் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 64% உயர்ந்து, 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ₹1.35 லட்சம் என்ற விலையை எட்டியது.
தொழில்துறை மதிப்பீடுகளின்படி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs), தங்கக் கடன் அளவை விரிவுபடுத்தியுள்ளன. நிலுவையில் உள்ள கடன்களின் மதிப்பு ₹3 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கிடையில், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ‘போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்’ அறிக்கையின்படி, வங்கிகள், தங்கக் கடன் சந்தைப் பங்கில் NBFC-களை முந்தி, 50.35% பங்கைக் கொண்டுள்ளன. மீதமுள்ளவை நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
முத்தூட் ஃபைனான்ஸ், மணப்புரம் மற்றும் IIFL ஃபைனான்ஸ் ஆகியவை மிகப்பெரிய தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்களில் சிலவாகும்.
ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கையில், செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி, வங்கிகள் மற்றும் NBFC-களின் ஒருங்கிணைந்த தங்கக் கடன்கள், மொத்த நிலுவைக் கடன்களில் 5.8% பங்கைக் கொண்டிருந்தன.
